உத்தரபிரதேச மாநிலத்தில் இரு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கி முறைகேடு செய்ததாக அன்புமணி ராமதாஸ் மீது சிபிஐ தொடுத்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது இது மிண்டும் பாமக நிறுவனம் ராமாதாஸ், மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் அன்புமணி ராமதாஸ்,அவருடைய பதவியின்போது, உத்தரபிரதேச மாநிலத்தில் இரு  மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக அன்புமணி மீது சி.பி.ஐ வழக்கு தொடர்ந்தது.மேலும் அவருக்கு எதிராக சி.பி.ஐ  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அந்த குற்றச்சாட்டுகள் அடிப்படையில் டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் அன்புமணி உட்பட 10 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்தது. ஆனால் இந்த குற்றச்சாட்டு பதிவில் தங்களது தரப்பு வாதத்தை முழுமையாக விசாரணை நீதிமன்றம் கேட்கவில்லலை, எனவே விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறும் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்,  தங்களை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் எனக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் அன்புமணி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், அன்புமணி உள்ளிட்டோர் மீது விசாரணை நீதிமன்றத்தில் பதியப்பட்ட குற்றச்சாட்டு பதிவுகள் (charges framing) அனைத்தையும் ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் அன்புமணி உள்ளிட்டோரின் தரப்பு விளக்கத்தை கேட்டு பின்னர் உரிய நடைமுறையை பின்பற்றி குற்றச்சாட்டு பதிவை மேற்கொள்ள உத்தரவிட்டது,  இந்நிலையில் குற்றச்சாட்டு பதிவுக்காக அன்புமணி உள்ளிட்டோர் மீதான வழக்கு டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது,  ஆனால் இன்றைய தினம் அன்புமணி ராமதாஸ் நேரில் ஆஜராகுவதிலிருந்து விலக்கு கோரியிருந்ததை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதோடு, இந்த வழக்கை ஆகஸ்ட் 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது. மேலும் அன்றைய தினம் குற்றச்சாட்டு பதிவுக்காக சி.பி.ஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மீதான வாதம் நடைபெறும் எனவும்  நீதிமன்றம் தெரிவித்துள்ளது

வழக்கமாக பாராளுமன்றத்தில் எந்த கருத்தாக இருந்தாலும் தன் கருத்தை தயக்கமின்றி தெரிவிக்க கூடியவராக இருந்த அன்புமணி, தற்போது தன்மீதான முறைகேடு வழக்கு நிலுவையில் உள்ளதால்தான்  மத்திய அரசு கொண்டுவரும் எந்த திட்டத்தையும் எதிர்க்கவோ, ஆதராவாகவோ செய்யாமல், பாராளுமன்றத்தில் மிகவும் பவ்யமாக நடந்துகொள்கிறார் என அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கிலிருந்து விடுபடும்வரை அவர் மத்திய அரசுக்கு எதிராக வாய் திறக்க மாட்டார் என கூறப்படுகிறது. ஆனாலும் சிபிஐ தன் தரப்பு பணியை  கனகச்சிதமாக தொடரந்து செய்துவருவதால் இந்த வழக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்திவிடுமோ என்ற கலக்கத்தில் அக்கட்சியின் தலைவர் இருப்பதாக தகவல்கள் வெளியாகிறது.