Asianet News TamilAsianet News Tamil

நாளை பொதுத்தேர்வு... மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார் அன்புமணி ராமதாஸ்!!

நீக்கப்பட்ட பாடங்களில் இருந்து வினாக்கள்   கேட்கப்படாமல் இருப்பதும் உறுதி செய்யப்பட வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

Anbumani Ramadas gave advice to the students regarding public exams
Author
Tamilnadu, First Published May 4, 2022, 3:37 PM IST

நீக்கப்பட்ட பாடங்களில் இருந்து வினாக்கள்   கேட்கப்படாமல் இருப்பதும் உறுதி செய்யப்பட வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மற்றும் புதுவையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு நாளை, மே 5 ஆம் தேதி வியாழக்கிழமையும், பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் ஈராண்டு இடைவெளிக்குப் பிறகு நாளை மறுநாள் 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமையும் தொடங்குகின்றன. இரு வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளை எழுதும் மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  அதேபோல், வரும் 10 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல், ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு,  நடைபெறவிருக்கும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் எனது வாழ்த்துகள். தமிழ்நாடு மற்றும் புதுவையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை 9 லட்சத்து 55,139 மாணவர்களும்,  11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை 8 லட்சத்து 85,053 பேரும், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை   8 லட்சத்து 37,311 பேரும் எழுதுகின்றனர். இம்மாத இறுதி வரை பொதுத் தேர்வுகள் நடைபெறுகின்றன. கடந்த காலங்களில் நடைபெற்ற பொதுத்தேர்வுகளுக்கும், நடப்பாண்டில் நடைபெறும் தேர்வுகளுக்கும்  நிறைய வேறுபாடுகள் உள்ளன. 3 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளை எழுதுபவர்களும் இப்போது தான் முதன்முறையாக பொதுத்தேர்வுகளை சந்திக்கின்றனர். 12-ஆம் வகுப்புத் தேர்வு எழுதுவோருக்கு கடந்த இரு ஆண்டுகளில் 10, 11-ஆம் வகுப்புத் தேர்வுகள் நடத்தப்படவில்லை.

Anbumani Ramadas gave advice to the students regarding public exams

11-ஆம் வகுப்பு தேர்வு எழுதுபவர்கள் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதவில்லை. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது இயல்பாகவே அவர்கள் எதிர்கொள்ளும் முதல் பொதுத்தேர்வு ஆகும். அதனால் பொதுத்தேர்வு எழுதும் 3 வகுப்பினருக்கும் இயல்பாகவே ஒரு வித பதற்றம் ஏற்படக்கூடும்; ஆனால், அது தேவையற்றது. மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் தான் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மருத்துவம் தவிர்த்த மற்ற படிப்புகளில் சேருவதற்கான தகுதியை 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் தான் வழங்குகின்றன. அவ்வகையில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியதாகும். பத்தாம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளும்  பல்வேறு காரணங்களின் அடிப்படையில் மிகவும் முக்கியமானவை தான். இதைக் கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களும் பொதுத்தேர்வுகளை எழுதுவதில் மிக அதிக கவனம் செலுத்த வேண்டும். 10, 11, 12 ஆகிய பொதுத்தேர்வுகளை 3 வார இடைவெளியில் நடத்த வேண்டியிருப்பதால், நடப்பு ஆண்டிலும் ஒரு பாடத் தேர்வுக்கும், இன்னொரு பாடத் தேர்வுக்கும் இடையில் போதிய இடைவெளி விடப்படவில்லை. ஆனாலும் கூட பாடத் திட்டம் குறைக்கப்பட்டிருப்பதாலும், இரு முறை திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டிருப்பதாலும் பொதுத்தேர்வுகளை எழுத மாணவ, மாணவியர் பதற்றமின்றி, மனதளவில் தயாராகியிருப்பார்கள்.

Anbumani Ramadas gave advice to the students regarding public exams

இனி வரும் நாட்களில் அனைத்துப் பாடங்களையும் பற்றி கவலைப் படாமல், அடுத்து வரும் தேர்வில் மட்டும் கவனம் செலுத்துவதன் மூலம் அதிக மதிப்பெண் பெறலாம். பொதுத்தேர்வுகளின் போது கடைபிடிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயங்களில் முதன்மையானது  பதற்றத்தைக் குறைப்பதாகும். தேர்வில் நன்கு தெரிந்த விடைகளை முதலில் எழுத வேண்டும். அனைத்துத் தேர்வுகளையும் அச்சமின்றி மாணவர்கள் எழுத வேண்டும். அதேநேரத்தில் மாணவர்களின் படிப்புக்கு பெற்றோர்கள் அனைத்து வகையிலும் உதவியாக திகழ வேண்டும். மாணவர்களை மதிப்பெண் எடுக்கும் எந்திரமாக கருதி அவர்கள் மீது அழுத்தத்தை திணிக்காமல், அவர்களிடையே நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களை பெற்றோர்கள் மட்டுமின்றி, அவர்களுக்குத் தெரிந்த அனைவரும் நம்பிக்கை வார்த்தைகளைக் கூறி ஊக்குவிக்க வேண்டும். மற்றொருபுறம், பொதுத்தேர்வுகள் குளறுபடியின்றி நடைபெறுவதை அரசு தேர்வுகள் துறை உறுதி செய்ய வேண்டும். நடப்பாண்டில் 12ஆம் வகுப்புக்கு நடத்தப்பட்ட இரு திருப்புதல் தேர்வுகளிலும் வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாயின. அதேபோன்று பொதுத்தேர்வுகளிலும் நடக்காமல் இருப்பதை தேர்வுகள் துறை உறுதி செய்ய வேண்டும். அதேபோல், நீக்கப்பட்ட பாடங்களில் இருந்து வினாக்கள்   கேட்கப்படாமல் இருப்பதும் உறுதி செய்யப்பட வேண்டும். மொத்தத்தில் பொதுத்தேர்வுகள் செம்மையாக நடத்தப்படுவதற்கும், அதில் மாணவ, மாணவியர் சாதிப்பதற்கும் எனது வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன் என்று குறிப்பிட்டு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios