Asianet News TamilAsianet News Tamil

சர்வதேச மாநாடு, விளையாட்டுப் போட்டியை மதுவின்றி நடத்த முடியாதா? மது வழங்குவது என்ன தமிழ்ப் பண்பாடா? அன்புமணி

பன்னாட்டு மற்றும் தேசிய அளவிலான மாநாடுகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் மது வகைகளை இருப்பு வைக்கவும், பரிமாறவும் அனுமதிக்கும் உத்தரவை திரும்ப பெற வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

Anbumani insisted that alcohol should not be distributed in international meetings
Author
First Published Apr 25, 2023, 10:39 AM IST

திருமண மண்டபங்களில் மது விநியோகம்

திருமண மண்டபங்களில் மது விநியோகம் என்ற உத்தரவை தமிழக அரசு திரும்ப பெற்றுள்ளதற்கு வரவேற்பு தெரிவித்த பாமக தலைவர் அன்புமணி, சர்வதேச மாநாடு, விளையாட்டுப் போட்டியை மதுவின்றி நடத்த முடியாதா? என கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், திருமண அரங்குகள், விளையாட்டு அரங்குகள், விருந்துக் கூடங்கள் ஆகியவற்றில்  நடைபெறும் பொது நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள், விருந்து நிகழ்ச்சிகளில் மதுவகைகளை இருப்பு வைக்கவும், பரிமாறவும் அனுமதிக்கப்படும் என்ற  அறிவிப்பில் மாற்றம் செய்துள்ள தமிழக அரசு, திருமண நிகழ்வுகள் மற்றும் பிற கொண்டாட்டங்களில் மது பரிமாற அனுமதிக்கப்படாது என்று அறிவித்துள்ளது. பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளிடமிருந்து எழுந்த எதிர்ப்பு, பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்ட கொந்தளிப்பு ஆகியவற்றுக்கு அஞ்சித்தான் இந்த மாற்றத்தை தமிழக அரசு செய்துள்ளது. 

மே 4 ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு மது கடைகளை மூடுங்கள்.! திடீர் கோரிக்கை வைத்த பாஜக.! என்ன காரணம் தெரியுமா.?

Anbumani insisted that alcohol should not be distributed in international meetings

ஆட்சியாளர்களுக்கு யார் அறிவுரை வழங்கினார்கள்

தமிழக அரசு உள்துறையின் அரசாணை எண் 9-இல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு திருமண நிகழ்வுகள் மற்றும் பிற கொண்டாட்டங்களில் மது பரிமாற அனுமதிக்கப்படாது என்று  அறிவித்துள்ள தமிழக அரசு, அதே நேரத்தில் பன்னாட்டு மற்றும் தேசிய அளவிலான மாநாடுகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில்  மது வகைகளை இருப்பு வைக்கவும், பரிமாறவும் அனுமதிக்கப்படும் என்று ஆணை பிறப்பித்துள்ளது. இதற்காக 11-&ஆம் எண் கொண்ட புதிய அரசாணையை நேற்று வெளியிட்டுள்ளது.  புதிய பண்பாட்டுச் சீரழிவை ஏற்படுத்தும் இந்நடவடிக்கை தேவையற்றது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. பன்னாட்டு / தேசிய மாநாடுகளாக இருந்தாலும், விளையாட்டு நிகழ்வுகளாக இருந்தாலும் அவற்றின் வெற்றி, எடுத்துக் கொள்ளப்பட்ட கருப்பொருளில் தான் உள்ளதே தவிர மது பரிமாறுவதில் அல்ல. பன்னாட்டு/தேசிய மாநாடுகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் மது பரிமாறப்படுவது கட்டாயம் என்று ஆட்சியாளர்களுக்கு யார் அறிவுரை வழங்கினார்கள்? என்று தெரியவில்லை. 

Anbumani insisted that alcohol should not be distributed in international meetings

மது வழங்குவது என்ன தமிழ்ப் பண்பாடா?

இது தொடர்பாக எந்த வழிகாட்டுதல்களையும் ஐ.நா அவை உள்ளிட்ட பன்னாட்டு  அமைப்புகள் வெளியிடவில்லை. அவ்வாறு இருக்கும் போது பன்னாட்டு/தேசிய நிகழ்வுகளில் மது பரிமாற அனுமதி அளிக்க வேண்டும் என்ற சிந்தனை தமிழக அரசுக்கு எவ்வாறு ஏற்பட்டது? மது வழங்குவது என்ன தமிழ்ப் பண்பாடா? தமிழ்நாட்டில் இதுவரை இருமுறை உலக முதலீட்டாளர் மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. அவை தவிர ஏராளமான பன்னாட்டு/தேசிய மாநாடுகள், கலந்துரையாடல்கள் அரசின் சார்பில் நடத்தப்பட்டுள்ளன.  இப்போதும் கூட ஜி 20 அமைப்புகள் தொடர்பான மாநாடுகள் அதிக எண்ணிக்கையில் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால், அவை எதிலும் இதுவரை மது இருப்பு வைக்கப்படவோ, பரிமாறப்படவோ இல்லை. இந்தியாவில் தற்போது நடக்கும் தொடரையும் சேர்த்து 16 ஐ.பி.எல் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. கொரோனா  ஊரடங்கு காலத்திலும், வேறு சில நெருக்கடியான காலத்திலும் தவிர மீதமுள்ள எல்லா ஆண்டுகளிலும் சென்னையில் ஐ.பி.எல் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. 

Anbumani insisted that alcohol should not be distributed in international meetings

விளையாட்டு அரங்கில் மது விற்பனை

உலக சதுரங்க போட்டிகள் அண்மையில் மாமல்லபுரத்தில் நடத்தப்பட்டன. இன்னும் ஏராளமான பன்னாட்டு/தேசிய விளையாட்டுப் போட்டிகள் சென்னையிலும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் நடத்தப்பட்டுள்ளன. அவை எதிலும் மது இருப்பு வைக்கவோ, பரிமாறவோ அனுமதிக்கப்படவில்லை. இத்தகைய சூழலில் இனிவரும் காலங்களில் மது வகைகளை பரிமாறுவதற்கு தமிழக அரசு துடிப்பதன் காரணத்தை புரிந்துகொள்ள முடியவில்லை. ஐ.பி.எல் உள்ளிட்ட போட்டிகளில் மது உள்ளிட்ட போதைப் பொருட்களின் விளம்பரங்களை காட்சிப் படுத்தவே அனுமதிக்கக் கூடாது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறேன். அவ்வாறு இருக்கும் போது அரங்கத்திலேயே மதுவெள்ளத்தை கட்டவிழ்த்து விடத் துடிப்பது எந்த வகையில் நியாயம்? 

Anbumani insisted that alcohol should not be distributed in international meetings

உத்தரவை திரும்ப பெற்றிடுக

பன்னாட்டு/தேசிய மாநாடுகளிலும், விளையாட்டு நிகழ்வுகளிலும் பங்கேற்கும் வெளிநாட்டவர்கள் மது அருந்தும் வழக்கம் கொண்டவர்கள் என்பதற்காக நிகழ்விடத்திலேயே நாம் கடை விரிக்கத் தேவையில்லை; அது நமது பண்பாடும் இல்லை என்பதை அரசு உணர வேண்டும். மது இல்லாத தமிழகம் அமைக்க வேண்டும் என்பது தான் தமிழ்நாட்டு மக்களின் விருப்பம். அதை உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும். அதன் முதல்கட்டமாக பன்னாட்டு மற்றும் தேசிய அளவிலான மாநாடுகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் மது வகைகளை இருப்பு வைக்கவும், பரிமாறவும் அனுமதிக்கும் உள்துறையின் 9 மற்றும் 11 எண் கொண்ட அரசாணைகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படியுங்கள்

திருமண மண்பங்களில் மதுபானம் சட்டத்திருத்தம் நீக்கம்... அறிவித்தது தமிழக அரசு!!
 

Follow Us:
Download App:
  • android
  • ios