பாமகவை   காடுவெட்டி குருவிற்கு முன் குருவிற்கு பின் என  பிரிக்கலாம், வன்னியர் சங்கத் தலைவர் குருவின் மறைவு வன்னியர் சங்க இளைஞர்களை சொல்லலாம், குரு மறைவிற்கு முன்பு வரை இளைஞர்கள் வன்னியர் இளைஞர் படை என்றும் தீவிரமாகச் செயல்பட்டு வந்தனர். தங்களை அவர்கள் குருவின் தம்பிகள் என்றே தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு தீவிரமாக செயல்பட்டு வந்தனர். 

குரு உயிருடன் இருந்தபோதே அன்புமணியை பாமகவின் முதல்வர் வேட்பாளராக  முன்னிலைப்படுத்தி வந்தனர். கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் அன்புமணி முதல்வர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்ட நேரத்தில் அன்புமணியின் பிரச்சாரம் அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா பாணியில் "மாற்றம் முன்னேற்றம் அன்புமணி" என ஆளும் கட்சி எதிர்க்கட்சியை விட வித்தியாசமான முறையிலேயே இருந்தது. ஆனாலும், பாமக போட்டியிட்ட மொத்த தொகுதியையும் பறிகொடுத்தது. முதல்வர் வேட்பாளர் தோற்கும் பரிதாப சம்பவம் நிகழ்ந்தது. திமுக ஆட்சியை பிடிக்க முடியாமல் போனதற்கு பாமகவும் ஒரு காரணமாக இருந்தது. 

இந்நிலையில் 2021 ல் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 2 வருடங்களுக்குக் குறைவாகவே உள்ள நிலையில் தற்போதே படுஜோராக களமிறங்க ஆரம்பித்துவிட்டது பாமக.

அதாவது ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் பாமகவின் வாக்கு வங்கியை அதிகப்படுத்தும் வகையில் பாமகவினருக்கு புதிய உத்தரவு சென்றிருக்கிறது.  இந்த டீமிற்கு அன்புமணியின் முப்படைகள் செயல் திட்டம் எனப் பெயரிட்டிருக்கிறார்கள். செயல்திட்டத்தின் முக்கிய நோக்கம் வட மாவட்டங்களில் உள்ள 80 சட்டமன்றத் தொகுதிகளைத் தேர்வு செய்து அங்கு ராமதாஸ் சொல்லும் செயல் திட்டத்தை நிறைவேற்றுவது, அதில் 60 தொகுதிகளில் நிச்சயமாக வெற்றிபெற வேண்டும் என்பதுதான் நோக்கமாம். 

இதுதொடர்பாக நிர்வாகிகளுக்கு அனுப்பப்பட்ட அந்த அறிக்கையில், அன்புமணி தம்பிகள் படை, அன்புமணி தங்கைகள் படை, அன்புமணி மக்கள் படை என்ற மூன்று பிரிவுகளை உருவாக்க வேண்டும். ஒரு சட்டமன்றத் தொகுதியில் 2,000 பேர் கொண்ட அன்புமணி தம்பிகளின் படையையும், 1,000 பேர் கொண்ட அன்புமணி தங்கைகளின் படையையும் உருவாக்க வேண்டும். இவர்கள் மூலம் 1 லட்சம் பேர் கொண்ட அன்புமணி மக்கள் படையை உருவாக்க வேண்டும்.

ஒரு சட்டமன்றத் தொகுதியில் ஏறத்தாழ 200 கிராமங்கள் இருக்கும். ஒரு கிராமத்தில் 10 அன்புமணி தம்பிகளையும் 5 அன்புமணி தங்கைகளையும் தேர்வு செய்ய வேண்டும். அப்படித் தேர்வு செய்தால் ஒரு சட்டமன்றத் தொகுதியில் 2000 அன்புமணி தம்பிகளும், 1000 அன்புமணி தங்கைகளும் கிடைப்பார்கள். இதில் ஒவ்வொரு அன்புமணி தம்பியும் தங்களது தெருவில் 50 வாக்காளர்களை அன்புமணி மக்கள் படையில் சேர்க்க வேண்டும். 2,000 பேரும் தலா 50 பேரைச் சேர்ந்தால் நமக்கு 1 லட்சம் பேர் கொண்ட அன்புமணி மக்கள் படை கிடைக்கும். அவர்கள் நமது வாக்கு வங்கியாக விளங்குவார்கள்.

இவர்களுக்கு வயது 17-35க்குள் இருக்க வேண்டும் எனவும், குறைந்தபட்சம் 10ஆவது படித்திருக்க வேண்டும் எனவும், அன்புமணி தம்பியாக முக்கிய தகுதியாகக் கட்சியின் வெறிகொண்ட செயல் வீரராக இருக்க வேண்டும் என்றும், 50 வாக்காளர்களைக் கட்சியில் சேர்க்கும் தகுதி உள்ளவராக இருக்க வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவித்திருக்கிறார்கள்.

இதேபோல பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகளுக்கு மறைமுகமாக சில உத்தரவுகள் சென்றிருக்கிறது. இதுதொடர்பாக நம்மிடம் பேசிய பாமக நிர்வாகி ஒருவர், “கட்சியில் உள்ள நிர்வாகிகள் தங்கள் பகுதியில் நடைபெறும் வன்னியர்களின் குடும்ப நிகழ்ச்சிகளில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும். மாற்றுக் கட்சிகளில் உள்ள வன்னியர்கள் குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளக் கூடாது. அவர்களுக்கு எந்த விதத்திலும் உதவக் கூடாது.

அரசுப் பணிகளில் இருக்கும் வன்னியர்கள், சமூக முன்னேற்றச் சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்தால் மட்டும் அவர்களுக்கு உதவி செய்யுங்கள். அலுவலகப் பிரச்சினையாக இருந்தாலும், சொந்தப் பிரச்சினையாக இருந்தாலும், சங்கத்தில் இல்லாதவர்களுக்கு எந்த உதவியும் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இது வன்னியர்களை பாமகவில் இணைவதற்கான ஒரு நிர்பந்தமாகவே பார்க்கப்படுகிறது. இதைச் செயல்படுத்தும் பணிகளில் பாமக நிர்வாகிகள் இறங்கியுள்ளனர்.