2014 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட பா.ம.க தருமபுரி தொகுதியில் மட்டும் வென்றது. இதன் மூலம் எம்.பியான அன்புமணி ராமதாஸ் கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் பா.ம.கவின் முதலமைச்சர் வேட்பாளராக களம் இறங்கி 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தினார். கணிசமான வாக்குகளை பெற்று தமிழகத்தின் 3வது பெரிய கட்சி என்று பா.ம.க இந்த தேர்தலில் நிரூபித்தது.

இதன் மூலம் 2019 நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.கவிற்கு அனைத்து கட்சிகளிடம் இருந்தும் அழைப்பு வரும் என்று ராமதாஸ் காத்திருந்தார். அன்புமணியும் கூட இதே நம்பிக்கையில் தான் இருந்தார். ஆனால் தி.மு.கவை பொறுத்தவரை கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, தேர்தல் பொறுப்பாளர்கள் என பயங்கர வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. மருந்துக்கு கூட பா.ம.க பற்றி அந்த கட்சி வாய்திறக்கவில்லை.

அ.தி.மு.கவும் கூட நாடாளுமன்ற தேர்தல் வியூகத்தில் பா.ம.கவை சேர்க்கவில்லை என்கிறார்கள் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள். பா.ஜ.க மற்றும் சில உதிரி கட்சிகளுடன் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது தான் தற்போது வரை அ.தி.மு.கவின் நிலைப்பாடாக உள்ளது. இதனால் அ.தி.மு.க தரப்பில் இருந்து பா.ம.கவிற்கு இதுவரை எந்த சிக்னலும் வரவில்லை. 

கடந்த தேர்தலை போன்று மூன்றாவது அணி உருவானால் அதில் சேர்ந்துவிடும் நிலையில் அன்புமணி இருந்தார். ஆனால் தற்போதையை சூழலில் தினகரன் தனியாக தேர்தலை சந்திப்பாரா? அல்லது அ.தி.மு.கவுடன் சேர்ந்து கொள்வாரா என்கிற குழப்பமும் நீடிக்கிறது. இதனால் நாடாளுமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது, இருக்கும் எம்பி சீட்டை எப்படி தக்க வைத்துக் கொள்வது என்கிற கலக்கம் அன்புமணியை தொற்றிக் கொண்டுள்ளது.