Asianet News TamilAsianet News Tamil

பக்கத்து மாநிலங்களை பார்த்து திருந்துங்க!! அதிமுக அரசை கிழி கிழினு கிழிக்கும் அன்புமணி

anbumani emphasis agriculture budget in tamilnadu
anbumani emphasis agriculture budget in tamilnadu
Author
First Published Jan 27, 2018, 3:46 PM IST


ஆந்திரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், தெலுங்கானா மாநிலங்களில் விவசாயத்துக்கு தனி நிதிநிலை அறிக்கை உள்ளது போல் தமிழகமும் தனி பட்ஜெட் தாக்கல் செய்யவேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அன்புமணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா முழுவதும் குடியரசு நாளையொட்டி நாட்டு மக்களுக்கு பல்வேறு செய்திகள் வெளியிடப்பட்ட நிலையில், தெலுங்கானா மாநில ஆளுனர் நரசிம்மன் வெளியிட்டுள்ள அறிவிப்பு மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்துள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் அடுத்த ஆண்டு முதல் விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று குடியரசு நாள் விழா உரையில் தெலுங்கானா ஆளுனர் நரசிம்மன் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பை பாமக வரவேற்கிறது.

இந்தியாவில் ஆந்திரம், கர்நாடகம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று முதன்முதலில் குரல் கொடுத்ததும், இந்த விஷயத்தில் அரசுக்கு வழிகாட்டும் வகையில் கடந்த 10 ஆண்டுகளாக வேளாண் நிழல் நிதி அறிக்கை தாக்கல் செய்து வருவதும் பாட்டாளி மக்கள் கட்சி தான்.

பாமகவின் இந்த அறைகூவலுக்குப் பிறகு தான் இந்த மாநிலங்கள் விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யத் தொடங்கின; அதன்மூலம் வேளாண்துறை வளர்ச்சியைப் பெருக்கின என்பதில் பாட்டாளி மக்கள் கட்சி பெருமை கொள்கிறது.

அதுமட்டுமின்றி, தெலுங்கானாவில் ஒரு கோடி ஏக்கர் நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி செய்து தர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது; இந்த இலக்கை எட்ட நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.25,000 கோடி நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது என்றும் தெலுங்கானா ஆளுனர் கூறியிருக்கிறார்.

இதற்கெல்லாம் மேலாக விவசாயிகள் கடன் வலையில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்க மூலதன உதவியாக ஏக்கருக்கு ரூ.8000 வழங்கவும் தெலுங்கானா முடிவு செய்துள்ளது. விவசாயிகள் வங்கிகளிடமும், தனியாரிடமும் கடன் வாங்கி மீளாத கடன் சுமையில் சிக்குவதை தவிர்க்க இந்த ஏற்பாட்டை தெலுங்கானா செய்துள்ளது.

ஆனால், தமிழகத்தின் நிலை என்ன? என்பதை சிந்தித்துப் பார்த்தால் பெரும் ஏமாற்றமும், வேதனையும் தான் மிஞ்சுகிறது. காமராஜர் காலத்திற்கு பிறகு தமிழகத்திலிருந்து ஒரு நீர்ப்பாசனத் திட்டமும் செயல்படுத்தப் படவில்லை.

அத்திக்கடவு -அவினாசித் திட்டம், காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம், காவிரி-சரபங்கா நதி-திருமணிமுத்தாறு- வசிஷ்ட நதி இணைப்புக் கால்வாய் திட்டம், தோனி மடுவுத் திட்டம், தாமிரபரணி -நம்பியாறு இணைப்புத் திட்டம் என ஏராளமானத் திட்டங்கள் கடந்த 50 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளன.

தெலுங்கானாவில் பாசனத் திட்டங்களுக்காக ஆண்டுக்கு ரூ.25,000 கோடி நிதி ஒதுக்கப்படும் நிலையில், தமிழகத்தில் அதில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட நிதி ஒதுக்கப்படவில்லை.

ஆந்திரா, தெலுங்கானா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மத்திய அரசின் நிதியை எதிர்பாராமல் சொந்த நிதியில் பாசனத் திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் தமிழகம் மட்டும் அனைத்துக்கும் இலவு காத்தக் கிளியாய் மத்திய அரசை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

அதனால் 50 ஆண்டுகளுக்கு முன் ரூ.50 கோடியில் செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டிய அத்திக்கடவு அவினாசித் திட்டத்தின் மதிப்பு ரூ.3500 கோடிக்கும் கூடுதலாக உயர்ந்துள்ளது. இப்போது கூட முக்கிய பாசனத் திட்டங்களை சொந்த நிதியில் செயல்படுத்தாமல் மத்திய அரசு நிதிக்காகத் தான் தமிழக அரசு காத்துக் கிடக்கிறது.

ஆந்திரம், கர்நாடகம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் விவசாயத்துக்காக சிறப்புத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்பயனாகத் தான் வேளாண் துறையில் மத்தியப் பிரதேசம் 27.04 விழுக்காடும், தெலுங்கானா 19.07விழுக்காடும், ஆந்திரா 9.20 விழுக்காடும் வளர்ச்சியடைந்துள்ளன. மாறாக எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தாத தமிழகம் மைனஸ் 8% வளர்ச்சியை அடைந்திருக்கிறது. வேளாண்மைக்கும், பாசனத்திற்கும் முக்கியத்துவம் அளிப்பதன் பயனை இதிலிருந்தே உணரலாம்.

இந்தியாவின் முதல் தொழிலும், முதன்மைத் தொழிலும் விவசாயம்தான். இந்தியாவில் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டதன் பயனாக உற்பத்தித் துறையும், சேவைத் துறையும் குறிப்பிடத்தக்க அளவுக்கு வளர்ந்த பிறகும் 58 விழுக்காட்டினரின் வாழ்வாதாரமாக திகழ்வது விவசாயம் தான். ஆகவே, அத்துறையின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தான் மக்கள் நல அரசின் முதல் கடமையாக இருக்க வேண்டும்.

அதை உணர்ந்து வரும் ஆண்டிலிருந்தாவது வேளாண்துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யவும், நீர்ப்பாசனத் திட்டங்களை செயல்படுத்த ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.20 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்ய அரசு முன்வர வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios