அன்புமணி ராமதாஸ் மீதான மருத்துவக்கல்லூரி ஊழல் வழக்கு ஆகஸ்ட் 29-ல் முதல் மீண்டும் மறு விசாரணை நடத்த டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது, மத்தியபிரதேச மாநிலம் இந்தூர், உத்தரபிரதேச மாநிலம் பரேலி ஆகிய இடங்களில் 2 தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் மற்றும் 9 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது. டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது.

  

இந்த வழக்கில் கீழ்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து மறு விசாரணை நடத்த டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. மேலும் அன்புமணி உள்ளிட்டோர் வருகிற 19-ம் தேதி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதனை தொடந்து டெல்லி ரோஸ் அவன்யூ சி.பி.ஐ நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை தொடங்கியது.

 

அப்போது நீதிபதி, தனியார் மருத்துவ கல்லூரிகளை இந்திய மருத்துவ கவுன்சில் சோதனை நடத்திய போது எடுத்த வீடியோ ஆதாரங்களை வழங்க நீதிபதி அஜய் குமார் உத்தரவிட்டு வழக்கை வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்று முதல் விசாரணை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின் போது அன்புமணி உள்ளிட்ட 6 பேர் இன்று ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.