ஸ்டாலின் அடுத்த முதல்வர் என்று ராகுல் தான் சொல்கிறார். ஆனால், அடுத்த ஜென்மத்தில் கூட, ஸ்டாலினால் முதல்வர் ஆக முடியாது என அன்புமணி சாபம் விட்டுள்ளார்.

சேலம், ராசிபுரத்தில் பேசிய பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, திமுக கூட்டணியில் மது ஆலை அதிபர்கள், பணக்காரர்கள், பண முதலைகள் மட்டுமே உள்ளனர். அராஜகம், வழிப்பறி, பெண் கடத்தல், கட்ட பஞ்சாயத்து ஆகியவை தான் அவர்கள் கூட்டணி. திமுகவினர் பிரியாணி கடையில் ஓசி பிரியாணிக்கு கேட்டு சண்டை போடுவது, பணம் கேட்டு பியூட்டி பார்லர் பெண் வயிற்றில் உதைப்பது, மொபைல் போனை எடுத்துக்கொண்டு ஓடுவது, ஓசி பஜ்ஜி கேட்பது என நாளுக்கு நாள் அக்கிரமம் செய்கிறார்கள்.

அடுத்ததாக பேசிய அவர், எங்களின் எல்லா வேட்பாளர்களையும், கூட்டணிக் கட்சிதலைவர்களின் ஆசிபெற்ற வேட்பாளர் என்று அறிமுகப்படுத்த முடியும். ஈஸ்வரன் கட்சியின் வேட்பாளர்தான் இங்கு போட்டியிடுகிறார். ஆனால், அவருக்கென்று தனிச் சின்னம் கிடையாது. ஈஸ்வரனிடம் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் ராசிபுரம் வந்து, உங்களின் வேட்பாளரை அறிமுகப்படுத்தி, திருமாவளவன் ஆசிபெற்ற வேட்பாளர் என்று கூறி வாக்கு சேகரிக்க முடியுமா? அதற்கான தைரியம் இருக்கிறதா? அப்படிக் கேட்டால் உங்களுக்கு ஓட்டு போடுவார்களா? டெபாசிட் போய்விடும். 

ஆனால், எங்கள் கூட்டணியிலுள்ள அனைத்து தலைவர்களின் பெயரைக் கூறியும் நாங்கள் வாக்கு சேகரிப்போம் என்று பேசினார். திமுக கூட்டணி அராஜகக் கூட்டணி, அதிமுக கூட்டணி அமைதிக்கான கூட்டணி என்று அன்புமணி தனது பேச்சில் குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர், ராகுல் பிரதமர் என்று ஸ்டாலின் தான் கூறுகிறார்; காங்கிரஸ் கட்சிகாரர்களே கூறுவதில்லை. அதேபோல், ஸ்டாலின் அடுத்த முதல்வர் என்று ராகுல் தான் கூறுகிறார். ஆனால், அடுத்த ஜென்மத்தில் கூட, ஸ்டாலினால் முதல்வர் ஆக முடியாது எனக் கூறியுள்ளார்.