ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி  உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த கூட்டணியில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இடது சாரிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகியவை இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போல் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் என மற்றொரு மெகா கூட்டணிக்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் பாமகவைப் பொறுத்தவரை இன்னும் குழப்பமான நிலையிலேயே உள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுகவுடன்தான் கூட்டணி என ராமதாசும், திமுகவுடன் கூட்டணி வேண்டும் என அன்புமணி ராமதாசும் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது, அது தொடர்பாக தொடர்ந்து குழப்பம் இருந்து வரும் நிலையில், அண்மையில் ஸ்டாலின் மருமகன் சபரீசன், அன்புமணியை ரகசியமாக சந்தித்துப் பேசியுள்ளார்.

சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் இரவு 11 மணிக்கு சபரீசன் காத்திருந்தார். அப்போது அங்கு அதிரடியாக நுழைந்தார்  அன்புமணி. சபரீசன் வழக்கமாக தன் நண்பர்களை சந்திக்கும் நட்சத்திர ஹோட்டல்தான் அது. அங்கே இருவருக்கும் இடையே கொஞ்ச நேரம் பேச்சுவார்த்தை நீடித்திருக்கிறது.

அதிமுக கூட்டணிக்கு பாமக சென்றால் வட மாவட்டங்களில் அதிமுக வெற்றிபெற  வாய்ப்பு இருக்கிறது என்பதால் அதை முறியடித்து பாமகவை திமுக அணிக்குக் கொண்டுவரலாம் என்று திமுகவில் உள்ள துரைமுருகன், எம்ஆர்கே. பன்னீர் செல்வம் போன்றவர்கள் முயன்று வருவதால் அவர்கள் ஏற்கனவே அன்புமணியுடன் டச்சில் இருந்துள்ளனர்.

இந்த நிலையில்தான் ஸ்டாலினுடைய மருமகான சபரீசனே களமிறங்கி அன்புமணியிடம் பேசியிருக்கிறார். ஏற்கனவே நடந்த பேச்சுகளில் தீர்வு கிடைக்காத சில விஷயங்களை அன்புமணி குறிப்பிட அதுபற்றி விளக்கிய சபரீசன் அதிகாரபூர்வமாக அல்லாமல் சில விஷயங்களை நாமே பேசி பிறகு தீர்த்துக் கொள்ளலாம் என்று அன்புமணியிடம் உரையாடியிருக்கிறார். இருபது நிமிடத்துக்கும் மேல் நீடித்த இந்த சந்திப்பில் ‘அப்பாவிடம் பேசிவிட்டு சொல்வதாக அன்புமணி சென்றிருக்கிறார் , தற்போது அன்புமணியின் பதிலுக்காக வெயிட்டிங் என்கிறது திமுக வட்டாரம்.

ஆனால் இதில் மற்றொரு சிக்கல் உள்ளது. திமுக கூட்டணிக்குள் பாமக வந்தால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டிப்பாக வெளியேறிவிடும். அதை ஸ்டாலின் விரும்பவில்லை என்றாலும் துரை முருகன் போன்ற வன்னிய திமுகவினர் இதை எதிர்பார்த்திருப்பதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் தேதி  அடுத்த மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட்டுவிடும் என்பதால் விரைவில் முடிவு எட்டப்படும் என தெரிகிறது.