திருச்சி மாவட்டத்தில் சீனியர் அமைச்சராக கே.என். நேருவும், ஜூனியர் அமைச்சராக இருந்தாலும் ஸ்டாலின், உதயநிதி மிக நெருக்கமானவராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இருக்கின்றனர்.
திருச்சி மாநகராட்சி முதன் ஆண் மேயராக வரப்போவது யார் என்ற கேள்விக்கு மத்தியில் கே.என். நேரு ஆதரவாளர் மேயராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆதரவளிப்பார் என்று பேச்சு சூடுபிடித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளையும் எங்கள் கூட்டணியே வெல்லும் என்று திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுகவினரும் அந்த மனநிலையிதான் உள்ளனர். அதேபோல மேயர் பதவிகளைக் கைப்பற்றும் சிந்தனையிலும் திமுகவினர் தீவிரமாக உள்ளனர். மத்திய மண்டலத்தில் உள்ள திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் திமுக கூட்டணி 50 வார்டுகளில் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பில் திமுகவினர் இருக்கிறார்கள். அதே வேளையில் திருச்சியில் மேயர் பதவியை திமுகவில் யார் கைப்பற்றப் போவது என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் சீனியர் அமைச்சராக கே.என். நேருவும், ஜூனியர் அமைச்சராக இருந்தாலும் ஸ்டாலின், உதயநிதி மிக நெருக்கமானவராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இருக்கின்றனர்.

எனவே, திருச்சி மாநகராட்சியை யாருடைய ஆதரவாளர் கைப்பற்றுவார் என்பது திமுகவில் பேசுபொருளாகியிருக்கிறது. தேர்தல் பிரசாரத்தின்போது மேயர் பதவி குறித்து பேசிய அமைச்சர் கே.என். நேரு, “திருச்சி மாநகர் 27-வது வார்டில் திமுக வேட்பாளராக போட்டியிடும் அன்பழகன் வெற்றிப் பெற்று திருச்சி மாநகர மேயராக வர வாய்ப்பு உள்ளது. நான் கேட்டால் அதை முதல்வர் செய்து தருவார் என நம்புகிறேன்” என்று பேசியிருந்தார். கே.என். நேருவின் தீவிர ஆதரவாளரான அன்பழகன், ஏற்கனவே 1996-2001-இல் சிறிது காலமும் 2006-2011 காலகட்டத்தில் முழுமையாகவும் துணை மேயராக இருந்தவர். இதுவரை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட இவருக்கு வாய்ப்பு கிடைத்ததில்லை. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் ஓரிடத்திலும் திமுக வெற்றி பெறாதபோது திருச்சி தொகுதியில் போட்டியிட்டு அன்பழகன் தோல்வியடைந்தவர்.

எனவே, திருச்சி மாவட்டத்தில் சீனியரான அன்பழகன் மேயர் பதவியைக் கைப்பற்றுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. என்றாலும் திருச்சியில் தன்னுடைய செல்வாக்கை நிலை நிறுத்த தன்னுடைய ஆதரவாளருக்காக அன்பில் மகேஷ் பொய்யாமொழி களமிறங்குவார் என்றும் கூறப்பட்டு வந்தது. ஆனால், அன்பழகனும் அன்பில் மகேஷும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான். அந்த அண்டர் ஸ்டாண்டிங்கில் மேயர் பதவியைக் கைப்பற்ற அன்பில் மகேஷும் அன்பழகனுக்கு ஆதரவாகவே இருப்பார் என்று திருச்சி திமுகவில் பேசப்படுகிறது. இப்படி ஒரு டீலிங் ஓடிக்கொண்டிருப்பதால், தன்னுடைய ஆதரவாளருக்கு துணை மேயர் பதவியை அன்பில் மகேஷ் பெற்றுத் தருவார் என்ற தகவல்களும் திருச்சியில் அலையடிக்கின்றன. துணை மேயர் பதவி அன்பில் மகேஷின் ஆதரவாளரான மதிவாணனுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இவரும் அன்பில் மகேஷ்-அன்பழகன் ஆகியோர் சார்ந்த அதே சமுதாயத்தைச் சேர்ந்தவர்தான்.

ஆனால், ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு மேயர், துணை மேயர் பதவியை ஒதுக்க திமுக மேலிடம் சம்மதிக்காது என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே திருச்சியில் பெரும்பான்மையாக உள்ள முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் துணை மேயர் பதவியைப் பெறும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அவர்களும் பதவிகளைப் பிடிக்க காய் நகர்த்தி வருகிறார்கள். ஒரு வேளை முடியாவிட்டால் குறைந்தபட்சம் கோட்டத் தலைவர் பதவிகளையாவது பிடிக்கும் முனைப்பில் சீனியர் உடன்பிறப்புகள் உள்ளனர். திருச்சியில் 1996, 2001, 2006, 2011 என 4 முறையும் பெண்களே மேயர் பதவியைக் கைப்பற்றினர். இந்த முறை மேயர் பதவியைக் கைப்பற்றும் முதல் ஆண் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
