அமமுக பொருளாளராக இருந்த முன்னால் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் கொரோனோவால் உயிரிழந்ததை தொடர்ந்து அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் பொறுப்பில் இருந்த ஆர். மனோகரன் அக்காட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதற்கான ஆயத்தப் பணிகளில் தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்தவகையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர், கழகப் பொருளாளர், கழக தலைமை நிலைய செயலாளர், கழக தேர்தல் பிரிவு செயலாளர் ஆகிய பொறுப்புகளுக்கு நபர்கள்  நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் விவரம் பின்வருமாறு: 

கழகத் துணை பொதுச் செயலாளராக முன்னாள் அமைச்சரும் தென்சென்னை தெற்கு மாவட்ட கழகச் செயலாளருமான திரு.செந்தமிழன் அவர்கள்  நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே கழக துணை பொதுச் செயலாளர்களாக செயலாற்றி வரும் முன்னாள் அமைச்சர் பழனியப்பன்  மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம் ரெங்கசாமி ஆகியோருடன் இணைந்து  பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கழக பொருளாளராக  முன்னாள் அரசு கொறடா மற்றும் திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு ஆர்.மனோகரன் நியமிக்கப்பட்டுள்ளார். 

கட்சியின் கழக தலைமை நிலைய செயலாளராக முன்னாள் அமைச்சர் மற்றும் திருப்பூர் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளருமான திரு.சி.சண்முகவேலு அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.  இவர் ஏற்கனவே கழக தலைமை நிலைய செயலாளராக செயலாற்றி வரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு கே.கே உமாதேவன் அவர்களுடன் இணைந்து  பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் கழக தேர்தல் பிரிவு செயலாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ராணிப்பேட்டை மாவட்ட கழகச் செயலாளருமான எம்.ஜி பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே கழக தேர்தல் பிரிவு செயலாளராக செயலாற்றி வரும் திரு எஸ் வி எஸ் பி மாணிக்கராஜா கயத்தாறு ஒன்றிய குழு பெருந்தலைவர் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதிய நிர்வாகிகள் இதுவரை கழக தலைமை நிலைய செயலாளர் பொறுப்பில் இருந்த திரு ஆர். மனோகரன் அவர்களும், கழக தேர்தல் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்த திரு செந்தமிழன் அவர்களும், கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்த சி. சண்முகவேலு அவர்களும் அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு கழக உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.