நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி இல்லாமல், பொது சின்னமும் இல்லாமல் 95 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் வெற்றி பெற்று அமமுகவை டிடிவி.தினகரன் உயிர்த்தெழ செய்துள்ளார். கூட்டணிகளை தவிர்த்து பார்த்தால் 3-வது பெரிய அணியாக உருவெடுத்து அமமுக கட்சி உள்ளாட்சி தேர்தலில் அசத்தியுள்ளது.

தமிழகத்தில் ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் நடைபெற்று முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகள் முழுமையாக எண்ணி நேற்று முடிக்கப்பட்டு முடிவு வெளியாகின. வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே திமுக - அதிமுக கூட்டணிகள் மாறி மாறி முன்னிலை பெற்றன. இறுதியில் 515 மாவட்ட ஊராட்சி வார்டுகளில், ஆளுங்கட்சியான அதிமுக தலைமையிலான கூட்டணி 240 இடங்களையும், எதிர்க்கட்சியான திமுக கூட்டணி 271 இடங்களை பிடித்து அசத்தியது. இதேபோல ஊராட்சி ஒன்றியங்களில் 5,090 வார்டுகளில் அதிமுக கூட்டணி 2,199 இடங்களையும், திமுக கூட்டணி 2,356 இடங்களையும், அமமுக கட்சி 95 இடங்களிலும் வெற்றி பெற்றது.

இந்நிலையில், அமமுக நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட்டு 5 சதவீத வாக்குகள் வாங்கிய நிலையில் படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து, போர்ப்படை தளபதி தங்கத்தமிழ்செல்வன் பெரும்படையுடன் திமுகவில் சேர்த்துவிட்டார். இசைக்கி சுப்பையா மாவட்டங்களை துடைத்துக்கொண்டு அதிமுகவில் இணைந்துவிட்டார். பிரச்சார பீரங்கி புகழேந்தி பெரும்படையை திரட்டிக்கொண்டுபோய் அதிமுக ஐக்கியமாகிக்கொண்டார். கணக்குப்படி பார்த்தால் தினகரன் உள்ளாட்சி தேர்தலில் 0.75 சதவீத ஓட்டு தான் வாங்குவார் என்று அதிமுக நிர்வாகிகள் ஏலணமாக பேசினர். 

இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் அமமுகவை கட்சியாக பதிவு செய்த போதும் மாநில தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்காமல் சுயேச்சையாக போட்டியிட்டார். அதேபோல், அதிமுக, திமுக கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் அமமுக கூட்டணி இல்லாமல் தனித்து நின்றது. தனித்து நின்று போட்டியிட்ட அமமுக 95 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் வெற்றி பெற்றுள்ளது. 1216 இடங்களில் 2-வது இடமும், 1000க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக, அதிமுக வெற்றி, தோல்வியை நிர்ணயித்துள்ளது. கூட்டணிகளை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் 15 சதவீத ஓட்டு வங்கியை பெற்று 3-வது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை அமமுக பெற்றுள்ளது.

கூட்டணியோடு பார்த்தால், இந்த அந்தஸ்து பாமகவுக்கு கிடைக்கும். மேலும், அமமுக கயத்தாறு, கண்ணங்குடி ஆகிய இரு ஊராட்சி ஒன்றியங்களை கைப்பற்றிய அசத்தியுள்ளது. அமமுக இந்த வளர்ச்சியை கண்டு ஆளும் அதிமுக தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது.