தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் அமமுக படுதோல்வி அடைந்ததையடுத்து அக்கட்சியில் உள்ள நிர்வாகிகள் தாய் கழகமான அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இதனால் விரைவில் அமமுக கூடாராம் காலியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

தமிழத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலிலும், 22 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலிலும் அமமுக ஒரு தொகுதிகளிலும் வெற்றி பெறவில்லை. பல இடங்களில் அமமுக வேட்பாளர்கள் டெபாசிட் கூட பெறவில்லை. இதையடுத்து அமமுக நிர்வாகிகள் அதிருப்பதியில் இருந்து வந்தனர். இந்நிலையில் அமமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் தாய் கழகமான அதிமுகவில் இணைந்து வருகின்றனர். 

இதனிடையே டிடிவி.தினகரனின் மிகவும் நெருங்கிய நெல்லை மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா மற்றும் நெல்லை மக்களவை தொகுதி வேட்பாளர் மைக்கேல் ராயப்பன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஜி.சின்னதுரை ஆகியோர் அமமுக கட்சியில் இருந்து விலகி அதிமுக மகளிர் அணி செயலாளர் விஜிலா சத்தியானந்த் எம்பி, அதிமுக அமைப்பு செயலாளர் சுதா கே.பரமசிவன் தலைமையில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியை சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைந்தனர்.

அதேபோன்று திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தை சேர்ந்த அமமுக சேர்ந்த ஆர்.பாலசுப்பிரமணியன் (மாவட்ட பேரவை செயலாளர்), கே.ராஜாராம் (மாவட்ட இணை செயலாளர்), வி.அப்பாதுரை (ஒன்றிய செயலாளர்) உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகளும், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த அமமுகவை சேர்ந்த பூக்கடை எம்.முனுசாமி (தர்மபுரி மாவட்ட இளைஞர் அணி செயலாளர்), ஆர்.அசோக்குமார் (மாநில வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர்) உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் முதல்வர் எடப்பாடியை நேற்று சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்து அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். அப்போது தர்மபுரி மாவட்ட செயலாளரும் உயர் கல்வி துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளரும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.