அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராக டிடிவி.தினகரன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமமுகவின் துணைப்பொச்செயலாளராக உள்ள தினகரன் இன்று  பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

முன்னதாக அதிமுக துணைப் பொதுசெயலாளராக இருந்த டிடிவி தினகரனை அக்கட்சியின் தற்போதைய ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் அதிரடியாக நீக்கம் செய்தனர். இதையடுத்து டிடிவி தினகரன் தனி அணியாக பிரிந்து அமமுக என்ற அமைப்பை உருவாக்கினார். மேலும் அதிமுகவை மீட்டே தீருவோம் என தெரிவித்தார். 

எனவே அமமுகவை கட்சியாக பதிவு செய்யாமல் இருந்து வந்தார். இதையடுத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து தற்போது நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிட அதே குக்கர் சின்னத்தை டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்தில் கோரினார். ஆனால் தேர்தல் ஆணையம் அந்த சின்னத்தை ஒதுக்கமுடியாது என கூறியது. இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் தரப்பில் பதிவு செய்யாத கட்சிக்கு சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. 

அப்போது பதிவு செய்யப்படாத கட்சியாக இருப்பதால் அமமுக கட்சி வேட்பாளர்கள் சுயேட்சை வேட்பாளர்களாக கருதப்படுவார்கள். ஆகையால் அவர்களுக்கு தனித்தனி சின்னம் மட்டுமே ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் கெடுபிடி காட்டியது. ஆனாலும் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்ததால் அமமுகவுக்கு பரிசுபெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டது. ஆனாலும் அமமுக வேட்பாளர்கள் சுயேட்சை வேட்பாளர்களே கருதப்பட்டனர். 

இந்நிலையில் அடுத்த மாதம் 4 சட்டமன்ற இடைத்தேர்தல் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு கட்சியாக பதிவு செய்ய திட்டமிட்டிருந்தார். இது தொடர்பாக சென்னை அசோக் நகரில் உள்ள அமமுக கட்சி அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். பின்னர் அமமுக பொதுச்செயலாளராக டிடிவி.தினகரன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் தற்போது பொதுச்செயலாளராக இருக்கும் சசிகலா விடுதலையான பிறகு தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.