amitsha orders to tamilisai

தமிழர்களின் அரசியல் விடிவெள்ளியாக தாங்கள் காலூன்றிவிட்டதாக கடந்த சில மாதங்களாக தமிழக பா.ஜ.க. கெத்து காட்டி வந்தது. ஆனால் நேற்றோ, தாங்கள் எப்போது பலம் பெறுவோம் என்பதற்கு நாள் குறித்துச் சொல்லியிருக்கிறார் தமிழிசை. 
ஏன் இந்த திடீர் பின்வாங்கல்? என்று விசாரித்தால்...எல்லாம் மேலிடத்திலிருந்து வந்த அழுத்தமான எச்சரிக்கைதான் என்கிறார்கள். 

கடந்த இரண்டு மூன்று மாதங்களில் மட்டும் மத்திய அமைச்சர்களாக இருக்கும் முக்கிய நபர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை காரணம் காட்டி தொடர்ந்து தமிழகத்துக்கு வந்து சென்றார்கள். வெங்கய்யா நாயுடு, நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி ஆகியோர் இதில் முக்கியமானவர்கள்.

இவர்கள் ’ஆடு மேய்ச்சாப்லேயும் ஆச்சு, அண்ணனுக்கு பொண்ணு பார்த்தாப்லேயும் ஆச்சு’ எனும் கணக்கில், தமிழகம் வந்த கையோடு இங்கிருக்கும் பொதுவான அரசியல் சூழல், தமிழக பா.ஜ.க. தலைவர்களின் செயல்பாடுகள், மக்கள் மத்தியில் பா.ஜ.க.வுக்கு இருக்கும் செல்வாக்கு ஆகியவற்றை நேரடியாகவே ஓரக்கண்ணில் கவனித்து சென்றிருந்தனர். 

இவர்கள் அத்தனை பேரும் தனித்தனியாக சமீபத்தில் கொடுத்த ரிப்போர்ட்டை வைத்து அமித்ஷா சில முடிவுகளை எடுத்திருக்கிறார். அதன் அடிப்படையில்தான் மாநில தலைவர் தமிழிசைக்கு சில கட்டளைகள் வழங்கப்பட்டிருக்கின்றனவாம். அதில் முக்கியமானவை...

* தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்றிவிட்டது என்று மிகைப்படுத்தப்பட்ட வார்த்தைகளை கூறி மக்களை எரிச்சலூட்ட வேண்டாம். யதார்த்தத்தை பேசிப்பழகுங்கள். 

* ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின் பன்னீர் மூலமாக அ.தி.மு.க.வில் பிளவை உருவாக்கியதும், ஆட்சியை நடத்தும் எடப்பாடி அணியை இயக்குவதும், தினகரன் மீது வழக்கு பாய்ச்சப்பட்டதற்கும் பா.ஜ.க.வே காரணம் என்று பொதுவான பேச்சும் இருக்கிறது, பத்திரிக்கைகளும் _ மீடியாக்களும் வெளிப்படையாகவே இப்படி பேசுகின்றன. நம்மால் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் விளக்கம் கொடுக்க முடியாது.

ஆனால் மக்களின் மனதில் இந்த கருத்தை புகுத்தும் மீடியாவிடம் முறையிடுங்கள். அ.தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று கூறுங்கள். அதையும் மீறி அவர்கள் இப்படி பேசுவார்களேயானால் மிக கடுமையாக அதை கண்டித்து லீகல் நோட்டீஸ் அனுப்புங்கள். இப்படி எழுதுவதற்கும், சொல்வதற்கும் என்ன ஆதாரத்தை அவர்கள் வைத்திருக்கிறார்கள் என்று சட்டப்பூர்வமாக கேளுங்கள், நிரூபிக்க சொல்லுங்கள். 
- _ என்பவைதான்.

இவற்றை மனதில் ஏற்றிக் கொண்ட பிறகே தமிழிசையின் பேச்சில் மாறுதல் ஏற்பட்டிருக்கிறது என்கிறார்கள். 
அதேபோல் அ.தி.மு.க.வை இயக்குவது பா.ஜ.க. என்று இனி பேசும் மீடியாக்களிடம் அதை தவிர்க்குமாறு துவக்கத்தில் கோரிக்கை வைப்பதும், அவர்கள் அதை தொடரும் பட்சத்தில் தமிழக பி.ஜே.பி. சட்டப்பூர்வமாக பாயும் வாய்ப்பு அதிகமிருக்கிறதாம். 

தமிழிசைக்கு வழங்கியிருக்கும் கட்டளைகளில் இந்த இரண்டாவது பாயிண்டில் அமித்ஷா மிக தெளிவாக இருக்க காரணம், அ.தி.மு.க.வை உடைத்தும், அதிகாரம் காட்டி பலவீனப்படுத்தியும்தான் பா.ஜ.க. தமிழகத்தில் காலூன்றியது என்கிற பேச்சு எந்த காலத்திலும் வந்துவிடக்கூடாது, இயல்பாகவே தமிழர்களுக்கு தாமரையை பிடித்தது எனும் ரீதியில் சூழல் உருவாக வேண்டும் அல்லது உருவாக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறாராம். 

அதாவது வலிந்து திணித்தாலும் கூட, அது வெளியே தெரியாமல் ஏதோ அவர்களாகவே விருப்பப்பட்டு வாயை திறந்து ஏற்றுக் கொண்டது போல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாராம். 
என்னா அரசியல்டா சாமி!