டெல்லியில், அமைச்சர்கள், வி.வி.ஐ.பி.,க்கள் வசிக்கும், மத்திய டெல்லி பகுதியில் உள்ள, கிருஷ்ண மேனன் மார்க் பகுதியில் உள்ள பங்களாவில், வாஜ்பாய், தன் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். பிரதமராக இருந்த போது, பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் வசித்த அவர், 2004ல், பார்லிமென்டில் நடந்த ஓட்டெடுப்பின் போது, ஆட்சியை இழந்ததும், கிருஷ்ண மேனன் மார்க் பகுதியில் உள்ள, பங்களாவுக்கு மாறினார். அது முதல், கடந்த ஆண்டு ஆகஸ்டில், அவர் இறக்கும் வரை, குடும்பத்தினருடன் அங்கு வசித்தார்.

இந்நிலையில் வாஜ்பாய் இறந்ததை அடுத்து, நவம்பரில், அவரின் குடும்பத்தினர் பங்களாவை காலி செய்தனர். தற்போது யாரும் அங்கு குடியேறவில்லை. அந்த பங்களா, அமித் ஷாவுக்கு ஒதுக்கப்பட உள்ளது .

சில நாட்களுக்கு முன், அங்கு சென்ற அமித் ஷா, சில மாற்றங்களை செய்ய உத்தரவிட்டார். விரைவில் அங்கு அவர் குடியேற உள்ளார். தற்போது அவர், டில்லியில், அக்பர் சாலை, 11ம் எண் பங்களாவில் வசிக்கிறார்.

கடந்த முறை பிரதமரானதும், டெல்லியில் தலைவர்கள் வசித்த இல்லங்கள், நினைவிடங்களாக மாற்றப்படாது' என, மோடி உத்தரவிட்டார். 

அதன்படி, வாஜ்பாய் வசித்த பங்களாவும், நினைவிடமாக மாற்றப்படவில்லை. ஆனாலும் டெல்லியில் தலைவர்களுக்காக நினைவிடங்கள் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில், அவருக்கு நினைவிடம் கட்டப்பட்டுள்ளது.