திமுக - காங்கிரஸ் கூட்டணி முன்னேற்றத்திற்கான கூட்டணி இல்லை, ஊழலுக்கான கூட்டணி என பாஜக தேசிய தலைவர் அமித் ஷா விமர்சனம் செய்துள்ளார். 

மக்களவை தேர்தலை நெருங்கிவரும் நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் அனைத்து கட்சியினரும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் பாஜகவின் ஓட்டு வங்கியை அதிகரிக்க தேசிய தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் மோடியைத் தொடர்ந்து பல்வேறு தலைவர்கள் வருகை தரவிருக்கின்றனர். 

இந்த வரிசையில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று ஈரோடுக்கு வருகை தந்துள்ளார். அவரை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், இல.கணேசன் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் ரோட்டில் கைத்தறி நெசவாளர்கள் மத்தியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். 

அதில் மத்தியில் மீண்டும் மோடி தலைமையில் ஆட்சி அமைக்க நாம் உறுதி ஏற்கவேண்டும். மக்களின் பங்களிப்போடு ஆட்சி நடத்தப்பட வேண்டும். காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் பின்தங்கிய ஜவுளித்துறையை பாஜக அரசுதான் மேம்படுத்தி வருகிறது. திமுக - காங்கிரஸ் கூட்டணி முன்னேற்றத்திற்கான கூட்டணி இல்லை, ஊழலுக்கான கூட்டணி என்று அமித் ஷா விமர்சித்தார். 10 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் அங்கமாக இருந்த திமுக தமிழகத்திற்காக என்ன செய்தது? என கேள்வி எழுப்பினார். மக்களின் தேவைகளை கேட்டறிந்து அதனை தேர்தல் அறிக்கையிலேயே இணைக்க உள்ளோம் என தெரிவித்தார்.