ஊழலில் காங்கிரஸ் கட்சியும் திமுகவும் சமம் என பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கடுமையாக விமர்சித்துள்ளார். 

ராமநாதபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "மக்களவை தேர்தல் யுத்தத்திற்காக நாங்கள் ஒன்று சேர்ந்துளோம். 2019ம் ஆண்டு தேர்தலுக்காக இங்கு கூடியுள்ளோம். வருகிற மக்களவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெறும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. 

தமிழகத்தில், பாஜக 5 தொகுதிகளில் மட்டும் போட்டியிடவில்லை. 40 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. அது அதிமுக மற்றும் பாமக-வாக கூட இருக்கலாம். ஒற்றுமையுடன் உழைத்தல் நமது கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். இந்த கூட்டணி கட்சி 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற பாஜக தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும். மக்களுக்கு பிரதமர் மோடியின் ஆட்சி எப்படி வேண்டுமோ, அதே போன்று நாட்டுக்கும் பிரதமர் மோடியின் ஆட்சி வேண்டும். 

பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம். அதற்கு தொண்டர்கள் முழு சக்தியோடு பணியாற்ற வேண்டும். புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் சிந்திய ரத்தம் வீண்போகாது. தீவிரவாதிகளுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும். பிரதமர் மோடி தலைமையிலான அரசு தீவிரவாதத்திற்கு ஒருபோதும் துணைபோகாது. பிரதமர் மோடி பயங்கரவாதத்தை எள்ளளவும் அனுமதிக்க மாட்டார்" என அவர் பேசினார்.