தங்க தமிழ்ச்செல்வனை அதிமுகவிற்கு இழுத்து வந்து, எடப்பாடி பழனிசாமியின் அரசியலை வளர்த்து, ஓ.பன்னீர் செல்வத்தை ஒடுக்க அமித்ஷாவும், துக்ளக் ஆடிட்டர் குருமூர்த்தியும் திட்டமிட்டுள்ளதாக அமமுகவின் நாளிதழான நமது எம்.ஜி.ஆர் விமர்சித்துள்ளது.

டி.டி.வி.தினகரனுக்கு எதிராக கலகக்குரல் எழுப்பி வருகிறார் தங்க தமிழ்செல்வன். இப்போதைய ஹாட் டாபிக் தங்க தமிழ்செல்வன் எந்தக் கட்சியில் இணைகிறார் என்பதாகவே இருக்கிறது. அவரை அதிமுகவில் இணைக்க அக்கட்சி தரப்பில் தீவிர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல, திமுகவும் தனது பங்கிற்கு அவருக்கு தூண்டில் போட்டு வருகிறது. 

இந்நிலையில், தங்க தமிழ்ச்செல்வனை பாஜக தான் பின்னால் இருந்து இயக்குகிறது என அமமுகவின் நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் தெரிவித்துள்ளது. நான் யார் ? நீ யார்? என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அந்தக் கட்டுரையில், ‘’தங்க தமிழ்ச்செல்வனை பயன்படுத்தி ஓ.பன்னீர்செல்வத்தை முடக்க பாஜகவும், எடப்பாடி பழனிசாமி தரப்பும் திட்டமிட்டுள்ளனர். அமித்ஷா வியூகம் வகுத்து அவர் கூற்றுபடி தான் தங்கதமிழ்ச்செல்வன் இவ்வாறு நடந்து கொள்கிறார். 

மகனுக்கு அமைச்சர் பதவி கேட்டு முஸ்தீபுகளை செய்த ஓ.பன்னீர் செல்வத்தை ஒடுக்கி, எடப்பாடி பழனிசாமியின் அரசியலை வளர்க்க தங்க தமிழ்ச்செல்வனை அதிமுகவில் இழுக்க அமித் ஷாவும் ஆடிட்டர் குருமூர்த்தியும் திட்டமிட்டுள்ளனர்’’ என அதில் கூறப்பட்டுள்ளது.