மக்களை கொல்லாதீர்கள் என்கிறோம். அமைதி பேச்சு மூலம் தீர்வு காணுங்கள் என்கிறோம். நேட்டோ கூலிப்படையை கலைக்க வேண்டும் என்கிறோம். ரஷ்யா உடனடியாக தாக்குதலை நிறுத்த வேண்டும் என்கிறோம்.
உக்ரேன் மீது ராணுவ தாக்குதல் நடத்தும் ரஷ்யாவை கண்டித்தும், அமெரிக்க தலைமையிலான நேட்டோ கூலிப்படையை கலைக்கக் கோரியும் மே 17 இயக்கம் சார்பில் சென்னையில் போராட்டம் நடைப்பெற்றது. அதன் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி தலைமையில் நடைப்பெற்ற போராட்டத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழில் போருக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி அனைவரும் அணிவகுத்தனர். மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் பங்கேற்று முழக்கமிட்டார். அப்போது இந்த போருக்கு முழுக்க முழுக்க அமெரிக்காதான் காரணம் என்றும் ரஷ்யா உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று ஆவேசமாக உரையாற்றினார். அதன் விவரம் பின்வருமாறு:-

போரின் அவலம் மோசமானது. பெண்களும் குழந்தைகளும் பதறி ஓடுவதை பார்க்கும் போது வேதனையாக உள்ளது. சர்வாதிகாரிகள் தான் போரை விரும்புவார்கள்.மொத்தத்தில் ரஷ்யாவின் ராணுவ தாக்குதல் கண்டனத்திற்குரியது. இந்தப் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இதில் ரஷ்யாவை மட்டும் வில்லனாக சித்தரிக்கிறார்கள், உக்ரேன் ஒப்பந்தத்தை மீறி அமெரிக்க தலைமையிலான நேட்டோ ராணுவ கூட்டணியில் இணைய முயன்றதும், உக்ரேனில் ரஷ்ய மொழி பேசும் மக்களை இனப்படுகொலை செய்ததும்தான் ரஷ்யாவை இந்த அளவிக்கு செல்ல காரணம். இதில் உக்ரேனை தூண்டில் புழுவாய் அமெரிக்காவும், நேட்டோவும் பயன்படுத்தியுள்ளது. இன்று போர் மூண்டதும் உக்ரேனுக்கு நேரடி உதவி செய்யாமல் அதை தவிக்க விட்டுள்ளனர்.

உக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி ஒரு கோமாளி. அவரிடம் உக்ரைன் சிக்கியிருப்பது குரங்கு கையில் பூ மாலை கிடைத்த கதையாகி இருக்கிறது. போரை வேடிக்கை பாருக்கும் ஐ.நா.சபை இனி எதற்கு? அது அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளுக்கு மட்டும் வீட்டோ பவர் கொடுத்ததால், ரஷ்யாவுக்கு எதிராக ஐநா கொண்டு வந்த தீர்மானமும் இப்போது பலனற்று, பயனற்று போய்விட்டது. தனக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, ரத்து செய்யும் வீட்டோ அதிகாரம் மூலம் ரஷ்யா அதில் இருந்து தப்பித்திருக்கிறது. முன்பு வளைகுடாவில் அமெரிக்கா ஈராக்கை தாக்கி அழித்த போதும், ஐ.நாவில் அமெரிக்கா இப்படித்தான் நடந்து கொண்டது. ஐ.நா.வின் தீர்மானங்கள் வீட்டோ அதிகாரத்தால் குப்பை தொட்டிக்குதான் போகிறது. ஒருபோதும் அதன் தீர்மானங்கள் போரில் பாதிக்கப்படும் மக்களின் கண்ணீரை துடைப்பதில்லை. ரத்தத்தை நிறுத்துவதில்லை. காயங்களை ஆற்றுவதில்லை.

நாங்கள் யாரையும் ஆதரிக்கவில்லை அதேநேரத்தில் போர் வேண்டாம் என்கிறோம். மக்களை கொல்லாதீர்கள் என்கிறோம். அமைதி பேச்சு மூலம் தீர்வு காணுங்கள் என்கிறோம். நேட்டோ கூலிப்படையை கலைக்க வேண்டும் என்கிறோம். ரஷ்யா உடனடியாக தாக்குதலை நிறுத்த வேண்டும் என்கிறோம். இவ்வாறு அவர் பேசினார். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மு.வீரபாண்டியன், தமிழக கொங்கு இளைஞர் பேரவை சார்பில் தனியரசு, மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆறுமுக நயினார், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வன்னியரசு உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் , அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்று அமெரிக்காவை கண்டித்தும் ரஷ்யா போரை நிறுத்த வேண்டும் எனவும் முழக்கமிட்டனர்.
