பாஜக மீது கை வைத்தால் வட்டியும், முதலுமாக திருப்பி தரப்படும் என அண்ணாமலை கூறியிருப்பது அவரது பலவீனத்தை வெளிப்படுத்துகிறது என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அரசை மிகத் தீவிரமாக விமர்சித்து வருகிறார். அதில் ஒரு பகுதியாக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் அண்ணாமலைக்கும் இடையே வார்த்தைப் போர் வெடித்தது. இதில் ஒரு படி மேலே போய், ‘பாஜக மீது திமுக கை வைத்தால், அதற்கு வட்டியும் முதலுமாக பாஜக திருப்பிக் கொடுக்கும்’ என்று காட்டமாகக் கூறியிருந்தார். இந்நிலையில் சென்னையில் இன்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அண்ணாமலையும் பாஜகவினரும் தமிழக அமைச்சர்களின் விமர்சனம் குறித்து கருத்து தெரிவித்தார். “கவன ஈர்ப்புக்காக வாயில் வந்ததை எல்லாம் பாஜகவினர் பேசி கொண்டிருக்கிறார்கள். பாஜகவினர் உருப்படியான அரசியலை பேசுவதே இல்லை. தங்களை அனைவரும் கவனிக்க வேண்டும், தங்களைப் பற்றியே விவாதிக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். பாஜக மீது கை வைத்தால் வட்டியும், முதலுமாக திருப்பி தரப்படும் என அண்ணாமலை கூறியிருப்பது அவரது பலவீனத்தை வெளிப்படுத்துகிறது.” என்று திருமாவளவன் தெரிவித்தார்.