Asianet News Tamil

தமிழக நிறுவனங்கள் முழுவதும் வடமாநிலத்தவர்கள்.. இதையும் அனுமதிக்க முடியாது.. நெருப்பாக கொதிக்கும் சீமான்..

மண்ணின் மைந்தர்களான தமிழக இளைஞர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்பினைத் தட்டிப்பறிக்கும் வகையில் ஏற்கனவே தொடர்வண்டித்துறை, அஞ்சலகம், வங்கி உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களில் வட மாநிலத்தவர் ஆதிக்கம் நிறைந்துள்ள நிலையில் 

All Tamil Nadu companies are filled from the North Indians .. This can not be allowed .. Seeman
Author
Chennai, First Published Feb 10, 2021, 11:08 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

தமிழர்களை முற்றாகப் புறக்கணித்து முறைகேடாக நடைபெற்றுள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனப் பொறியாளர் தேர்வினை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்: 

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 269 பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக, நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்ட 1500 பேரில் 8 பேர் மட்டும்தான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது கடும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழர்களை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்ததிலிருந்தே, இத்தேர்வில் மிகப்பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது என்பது வெட்டவெளிச்சமாகிறது. தமிழர்கள் சிந்திய குருதியிலும், வியர்வையிலும் உருவான இந்நிறுவனத்தைத் தொடங்குவதற்காக நெய்வேலியைச் சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசித்து வந்த பூர்வ குடித் தமிழர்கள் தங்கள் சொந்த நிலத்தை விட்டுக்கொடுத்தனர்.  

ஒப்பந்தப்படி நிலம் வழங்கிய குடும்பங்களின் உறவுகளுக்குப் பணி வழங்காமலும், பல்லாயிரக்கணக்கான ஒப்பந்த தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்யாமலும், என்எல்சி-யில் தொழிற்பழகுநர் பயிற்சி முடித்தவர்களுக்கும் பணி வழங்கப்படாமலும், திட்டமிட்டுப் புறக்கணிக்கும் என்எல்சி நிர்வாகத்தின் இனப்பாகுபாடு செயல்பாடானது பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது.

அதனை நிறுவுகின்ற வகையில் அண்மையில் நடைபெற்ற பொறியாளர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்பட்ட 1500 பேரில் 8 பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது முழுக்க முழுக்க என்எல்சி நிர்வாகத்தின் நிர்வாகச் சீர்கேட்டையே வெளிப்படுத்துகிறது. ஏற்கனவே கடந்த பல ஆண்டுகளாக என்‌எல்‌சி நிர்வாகம் மீது பல்வேறு நிதி, மற்றும் நிர்வாக ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள நிலையில், தற்போது பொறியாளர் தேர்வில் தமிழர்கள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதிலும் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளது என்பதில் சிறிதும் ஐயமில்லை. 

மண்ணின் மைந்தர்களான தமிழக இளைஞர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்பினைத் தட்டிப்பறிக்கும் வகையில் ஏற்கனவே தொடர்வண்டித்துறை, அஞ்சலகம், வங்கி உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களில் வட மாநிலத்தவர் ஆதிக்கம் நிறைந்துள்ள நிலையில், தற்போது தமிழ்நாட்டில் பூர்வகுடி மக்களுக்குச் சொந்தமான நிலங்களிலிருந்து உருவாக்கப்பட்ட என்எல்சியிலும் பணிவாய்ப்பினை வடவருக்குத் தாரைவார்ப்பது தமிழர்களின் அடிப்படை உரிமையைப் பறித்துச் சொந்த மண்ணில் அகதிகளாக அடிமையாக்கும் கொடுஞ்செயலாகும். இனியும் இதுபோன்ற தமிழரின் உரிமைகள் கண்முன்னே பறிபோவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. 

ஆகவே மத்திய அரசு, முறைகேடாக நடைபெற்றுள்ள என்எல்சி பொறியாளர்த் தேர்வினை உடனடியாகத் திரும்பப்பெற்று, தேர்வு முறைகேடு குறித்து உரிய நீதி விசாரணை நடத்தி, தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும். தமிழக அரசு இவ்விவகாரத்தில் தலையிட்டு தமிழக இளைஞர்களின் உரிமைகள் பறிபோவதைத் தடுக்க உரிய அரசியல் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். 

 

Follow Us:
Download App:
  • android
  • ios