Asianet News TamilAsianet News Tamil

இனி ஞாயிற்றுக்கிழமைகளிலும் அரசு அலுவலகங்கள் இயங்குமா? அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மநீம..!

சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கினால் மக்களுக்கு இது பேருதவியாக இருக்கும். காவல்துறை, மருத்துவமனை, தீயணைப்புத்துறை, பேருந்து ஊழியர்கள் போன்ற துறையினர் வருடத்தின் அனைத்து நாட்களிலும் பணிபுரிந்து வருகின்றனர் என்பது இச்சமயத்தில் நினைவுகூறத்தக்கது.

All government offices should be open on Sundays... makkal needhi maiam
Author
Tamil Nadu, First Published May 1, 2022, 11:20 AM IST

சனி, ஞாயிறன்று அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கும் என்ற அறிவிப்பை விரைவில் வெளியிட்டு, படிப்படியாக அதனை அமல்படுத்த மக்கள் நீதி மய்யம் கோரிக்கை வைத்துள்ளது.

இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் விடுத்துள்ள அறிக்கையில்;- மக்கள் பல்வேறு சலுகைகள், சான்றிதழ்கள் பெறுவதற்காக அரசு அலுவலகங்களை நாடுகின்றனர். மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் அரசு அலுவலகங்கள் மக்களின் தேவை, வசதிக்கேற்ப செயல்படவேண்டியது அவசியம். ஆனால், பிரிட்டிஷ் காலத்து அரசு நிர்வாக நடைமுறைகளிலுள்ள சிக்கல்கள், இலஞ்ச-ஊழல் போக்குகள் காரணமாக குறித்த காலத்திற்குள் சேவைகள் கிடைப்பதில்லை. பலநாட்கள் அல்லது பலமாதங்கள் திரும்பத்திரும்ப அரசு அலுவலகங்களுக்கு அலைந்தால்தான் நமது தேவை பூர்த்தியாகும் என்பதே இன்றைய எதார்த்த நிலையாகும் (இதனைச் சீரமைக்க ''சேவை பெறும் உரிமைச் சட்டத்தை'' அமல்படுத்தவேண்டியது அவசியம் என்பதை மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது)

All government offices should be open on Sundays... makkal needhi maiam

அரசு அலுவலகங்களுக்கு மக்கள் பலமுறை படையெடுப்பது எந்த வகையிலும் நியாயமில்லை. பன்னெடுங்காலமாகத் தொடரும் இப்பிரச்னையின் ஒருபகுதியைச் சரிசெய்யும் நோக்கில் தமிழக அரசு எடுத்துள்ள இந்த முயற்சி வரவேற்புக்கும், பாராட்டுக்கும் உரியது. பத்திரப்பதிவு அலுவலகங்கள் சனிக்கிழமையும் இயங்கும் என்பதே அந்த அறிவிப்பு. இந்த அறிவிப்பை முன்னெடுத்த அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், ஒப்புதலளித்த முதல்வர் அனைவரும் நல்லதொரு முன்னுதாரணத்தைத் தொடங்கி வைத்துள்ளார்கள். இவ்வறிவிப்பு இன்று முதல் (30-04-22, சனிக்கிழமை) செயல்பாட்டுக்கு வருகிறது. சனிக்கிழமை விடுமுறை நாளாகப் பெற்ற பொது மக்களுக்கு இது உதவியாக இருக்கும். அலுவலகத்திற்கு விடுமுறை எடுக்காமல், சம்பள இழப்பு இல்லாமல் பத்திரப் பதிவு அலுவலகம் சார்ந்த பணிகளை முடித்துக் கொள்ளலாம்.

All government offices should be open on Sundays... makkal needhi maiam

இந்த அறிவிப்பின் நோக்கம் பாராட்டுக்குரியது என்றாலும் இன்னும் பல அலுவலகங்களில் இதனை அமல்படுத்துவதும், ஞாயிறன்றும் அரசு அலுவலகங்களை இயங்கச் செய்வதுமே அனைத்து மக்களுக்கும் முழுப்பலன் கிடைப்பதை உறுதிசெய்யும். அதிகப்படியான மக்கள் அடிக்கடி வந்துசெல்லும் மின்வாரியம், வட்டாட்சியர் உள்ளிட்ட அனைத்து வருவாய்த்துறை அலுவலகங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள்(RTO), உணவுப்பொருள் வழங்கல் துறை, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் போன்ற அலுவலகங்களும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கினால் மக்களுக்கு இது பேருதவியாக இருக்கும். காவல்துறை, மருத்துவமனை, தீயணைப்புத்துறை, பேருந்து ஊழியர்கள் போன்ற துறையினர் வருடத்தின் அனைத்து நாட்களிலும் பணிபுரிந்து வருகின்றனர் என்பது இச்சமயத்தில் நினைவுகூறத்தக்கது.

பத்திரப்பதிவுத் துறையின் தற்போதைய அறிவிப்பில் சனிக்கிழமை பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு வாரத்தின் வேறொரு நாளில் விடுப்பு அளிக்கப்படவுள்ளது. இதேமுறையை மற்ற அரசு அலுவலகங்களும் பின்பற்றினால் அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பாரமில்லாமல் இதனைச் செயல்படுத்த முடியும். ஞாயிற்றுக்கிழமையும் அரசு அலுவலகங்கள் செயல்படும் என்ற நிலையை உருவாக்க கூடுதல் பணியாளர்களை நியமிக்கவேண்டிய அவசியம் உருவாகலாம். இதுவும் ஒருவகையில் நல்லதுதான். குரூப்-4 தேர்வின் 7300 பணியிடங்களுக்கு 22 இலட்சம் பேர் விண்ணப்பித்திருக்கும் சூழலில் ''ஞாயிறும் பணிநாளே'' என்ற நிலையானது கூடுதலாக பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும் வழிவகுக்கும். குறைந்த ஊழியர்களின் காரணமாக கூடுதல் பாரத்தைச் சுமந்து கொண்டிருக்கும் அரசு ஊழியர்களின் நீண்டநாள் பிரச்னையும் இதனால் தீர்க்கப்படலாம்.

All government offices should be open on Sundays... makkal needhi maiam

பத்திரப்பதிவுத்துறையில் சனிக்கிழமை பணிநாள் என்று தமிழக அரசு தொடங்கிவைத்துள்ள அரசு நிர்வாக சீர்திருத்தத்திற்கு மக்கள் நீதி மய்யத்தின் பாராட்டுகள். பொதுமக்கள், வேலை தேடும் இளைஞர்கள், அரசு ஊழியர்கள் என அனைவருக்கும் பயன்தரும் ''சனி, ஞாயிறன்று அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கும்'' என்ற அறிவிப்பையும் விரைவில் வெளியிட்டு, படிப்படியாக அதனை அமல்படுத்திடவும் மக்கள் நீதி மய்யம் கோருகிறது. ''மக்களால், மக்களுக்காக, இயங்கும் மக்களுடைய அரசாங்கமே உண்மையான ஜனநாயகம்''. மக்களின் விடுமுறை நாளில் அரசாங்கம் இயங்கட்டும். நிர்வாக சீர்திருத்தத்தில் தமிழகம் இந்தியாவிற்கு வழிகாட்டட்டும் என செந்தில் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios