alapporan thamizan vijay next film political controversy
சினிமாவில் முதல்வராக நடிக்கத் தொடங்கியவர்கள் எல்லாம், நிஜமாகவே முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்படத் தொடங்கிவிட்டார்கள். தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலைகளைப் பார்த்தால் இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது.
கமல், ரஜினி என்று மூத்த நடிகர்கள், இத்தனை நாட்கள் நடித்துக் களைத்துவிட்ட நிலையில், சினிமாவில் இதுவரை தாங்கள் சம்பாதித்த இமேஜை வைத்து அரசியலுக்குள் அடியெடுக்க தயங்கித் தயங்கி கால் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அரசியலுக்காகவே தன்னை சினிமா மூலம் தயார் படுத்திக் கொண்டு வருகிறார் என்றால் அது விஜய்தான் என்கிறார்கள் ரசிகர்கள், பொதுமக்கள்.
அரசியல் ஆசையுடன் இதுவரை பயணித்த சினிமா பயணத்தில், தன் ஒவ்வொரு படத்திலும் அதற்கான அச்சாரத்தை இட்டு வந்தார் விஜய். இப்போது தனது அடுத்த படத்துக்கு ஒரு தலைப்பு வைத்திருப்பதாக வெளிவந்துள்ள செய்திகள் அதனை உறுதிப் படுத்துகின்றன. விஜய் நடித்த மெர்சல் படத்தில் இடபெற்ற பாடலில் ‘ஆளப் போறான் தமிழன்’ என்று என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. அந்தப் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் இடம்பெற்ற ஆளப்போறான் தமிழன்’ என்ற அந்தப் பாடலை விஜய் ரசிகர்கள் பெரிதும் ரசித்தார்கள். அவர்களிடம் வரவேற்பு பெற்ற அந்த வரிகளையே அடுத்த ஒரு படத் தலைப்பாக வைக்க முடிவு செய்தார்களாம்.

தெறியைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த படம் மெர்சல். விஜய் மூன்று வேடங்களில் நடித்த இந்தப் படத்தில், சர்ச்சைக்குரிய உண்மைக்கு மாறான வசனங்கள் இடம்பெற்றிருப்பதாக புகார் எழுந்தது. மத்திய அரசு தனது சமூக நலத் திட்டங்களை விளக்குவதற்காக பெருமளவில் செலவு செய்து விளம்பரங்கள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்கிறது. ஆனால், மக்களிடம் காசு வாங்கிக் கொண்டு, ஒரே ஒரு வசனம் மூலம், மக்கள் விரோதக் கருத்துகளை மலினமான வகையில் கொண்டு சேர்த்ததாக மெர்சல் குறித்து விமர்சனம் எழுந்தது. இது தேசிய அளவில் பேசப்பட்ட விஷயமாகி விட்டது.

துப்பாக்கி, கத்தி ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, அடுத்த படத்தில் நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார் விஜய். அந்தப் படத்தை அடுத்து மெர்சல் இரண்டாம் பகுதி படத்திற்காக விஜயிடம் ஒரு கதை சொல்லியிருக்கிறார் அட்லி. தற்போது, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்திற்கான தலைப்பே இன்னும் வெளியாகாத நிலையில், அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கப் போகும் அதற்கடுத்த படத்துக்கு, ‘ஆளப் போறான் தமிழன்’ என்று தலைப்பு வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்தகைய சூழ்நிலையில்தான், சமூக வலைத்தளங்களில் பரவலாக கருத்துகள் விஜய் மீதான விமர்சனங்களாக முன்வைக்கப் படுகின்றன. அஜித் ரசிகர்கள், விஜய் ரசிகர்கள் என்று ரசிகர்கள் தரப்பில் இருவேறு பிரிவாகப் பிரிந்து மோதிக் கொள்வது ஒருபுறம் இருந்தாலும், இப்போது, விஜய் அரசியல் ரீதியான கருத்துகளை முன்வைத்து நடித்துக் கொண்டிருப்பதால், அரசியல் எதிர்ப்பு விமர்சனங்களும் விஜய் மீது குவிந்து வருகின்றன.
இத்தகைய எதிர்ப்பாளர்கள் முன் வைக்கும் முதல் விமர்சனமே... யார் இந்த விஜய்? அவரின் பின்னணி என்ன? எப்படி அவர் சினிமாவில் வளர்ந்தார்? எத்தகைய உள்நோக்கத்துடன் அவர் முன்னிறுத்தப் படுகிறார்? இவை போன்றவைதான்!
தற்போது தமிழகத்தின் பரபரப்பான பேச்சாக, விஜய் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது தான்! அரசியல் ரீதியான நடவடிக்கைகளை அண்மைக் காலமாக அவர் எடுத்து வருகிறார். ராகுல் காந்தி, அரவிந்த் கேஜ்ரிவால் என வடக்கே முட்டுக் கொடுத்தார். தெற்கேயும் அரசியல் தலைகளை சந்தித்தார். தற்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், அண்மையில் டிடிவி தினகரனை சந்தித்துப் பேசினார் விஜய். இதனால் அவரது அரசியல் ஆசைகள் ஒளிவு மறைவின்றி, கிசுகிசுக்க வழியின்றி, வெளிப்படையாகவே தெரிகின்றன.
ஆர்.கே.நகரை வைத்து அலசப்பட்ட இன்னொரு சினிமாப் புள்ளி, விஷால். கமல்ஹாசன் ஆதரவில், ஆர்.கே.நகரில் களம் இறங்குவார் என்று ஒரு வதந்தி பரவியது. கமல்ஹாசன் தன் வலிமையை சோதித்துக் கொள்ள இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்துவார் என்றெல்லாம் கூறப்பட்டது.
இப்படி சினிமா பின்னணியில் உள்ளவர்கள் அரசியல் அரங்கில் புக முயற்சி செய்வது, தமிழகத்தின் முன்னுதாரணங்களை வைத்துதானே! அதைத்தான் விஜய் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார். விஜய் என்று சொல்வதை விட, அவரது தந்தையின் உள் மனதின் வெறி என்று கூட சொல்லலாம்.
கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தால், விஜய் அடிமேல் அடி எடுத்து வைக்க, பழக்கப் படுத்தப் பட்ட பின்னணி தெளிவாகும். அவரது 25 வருட வாழ்க்கையின் பின்னணியை சற்றே திரும்பிப் பார்க்கலாம்...
பிரபல இயக்குநருக்கும் பிரபல கதாசிரியருக்கும் பிறந்தவர். தாய்மாமாவும் பிரபல சினிமா பாடகர். தாயும் இசை ரசனையும் திறமையும் கொண்டவர். இப்படி முழு சினிமா பின்னணியில் வந்தவர் விஜய். லயோலா கல்லூரியில் படித்து முடித்து வெளியில் வந்த போது, ஏதாவது ஒரு தொழில் செய்யவேண்டும் என்று எடுத்த ஒரு துறைதான் நடிப்பு.
அரசியல் துறையில் பல சிறு சிறு கட்சிகள், ஜாதிக் கட்சிகள் தோன்றக் காரணம் உண்டு. இவை பெரும்பாலும், பெரிய கல்லூரிகளை நடத்திக் கொண்டு வரும், அல்லது தொழிலை நகர்த்திக் கொண்டு வருபவர்களால் தொடங்கப் பட்டவையாக இருக்கும். தேர்தல் நேரத்தில் அல்லது தேவையான நேரங்களில் எல்லாம் நன்கொடைகள் மூலம் பெரிய கட்சிகள் இவர்களிடம் இருந்து பெற்றுச் சென்று, பிரதிபலன் எதுவும் செய்யாமல் இருந்துவிடுகின்றன என்ற மனச் சோர்வு உந்த, ஏன் தாங்களே கட்சி தொடங்கி, பெரிய கட்சிகளை பேரம் பேச தம்மை நோக்கி வர வைக்கக் கூடாது என்று காட்டியதன் விளைவுகள்தான் உதிரிக் கட்சிகள் பெருக்கம்!
இப்படித்தான் ஒரு சினிமா இயக்குனரும் சிந்தித்திருக்கிறார். எத்தனைபேரை நாம் வளர்த்து விடுவது, நாமே நம் சொந்த மகனை வளர்த்து விட்டால்..? இப்படி, தன் மகனை ஒரு பெரிய நடிகர் ஆக்க அவர் தந்தை எடுத்த முயற்சிகள் தான் எத்தனை!? நாளைய தீர்ப்பு, செந்தூரப்பாண்டி, மாண்புமிகு மாணவன், ஒன்ஸ்மோர், நெஞ்சினிலே, தேவா, ரசிகன், விஷ்ணு, சுக்ரன்... இப்படி எத்தனை படங்கள். எல்லாமே, அவர் தந்தை சொந்தமாகத் தயாரித்து இயக்கிய படங்கள்.
இப்படி எந்த ஒருவருக்கும் ஆசையும் திறனும் உள்ள அப்பா அம்மா இருந்து, கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்தால், இன்று தமிழ் சினிமாவும் அவரும் பெரிய ஹீரோதான்! நாளைய முதல்வர்கூட ஆகிவிடலாம்.

ஆனால், இந்த நிலையை அடைவதற்கு, ஆரம்ப கால விஜய் படங்களைப் பார்த்திருந்தால், ஒரு நாயகனை வளர்ப்பதற்கான வித்தையை அதன் இயக்குனர் எப்படி யோசித்திருப்பார் என்பது புரிந்துவிடும். அவரது படங்களில் கதையை விட நாயகிகளின் கவர்ச்சியைக் காட்டி, அதுவும் எவ்வளவு மோசமாகக் காட்ட வேண்டுமோ அப்படிக் காட்டி, கழற்றி விடுவது. இந்தப் பட்டியலில், நடிகைகள் சங்கவி, யுவராணி, சுவாதி... அவ்வளவு ஏன், மூத்த நடிகை ஸ்ரீவித்யா கூட இதற்கு இரையாகிவிட்டார்.

விஜயகாந்த், சிவாஜி போன்ற மூத்த பிரபலங்களுடன் நடிக்க வைத்து, தன் மகனை முன்னேற்றியவர் விஜயின் தந்தை சந்திரசேகர். "இந்தப் பாடலை பாடியது விஜய்" என்று பாடலின் இடையில் காண்பித்து, ஆரம்பகாலத்தில் மேலும் தூக்கிவிட்டார். இதெல்லாம் தன் மகனுக்காக ஒரு தந்தை எடுத்த முயற்சிகள்.

ரஜினியை தளபதி என்று சொன்னால், விஜய், இளைய தளபதி என்று அப்பாவி ரஜினி ரசிகர்களையே நம்ப வைக்க ரஜினி ரசிகராக நடிக்க வைத்தவர். இன்று அரசியல் ஆசை வந்ததும், இளைய தளபதிப் பட்டத்தின் இளமை மறைந்து, தளபதி ஆகிவிட்டார். இந்தத் தளபதிப் பட்டத்துக்குச் சொந்தக்காரரான திமுக.,வின் செயல் தலைவர் ஸ்டாலின் ஆதரவாளர்களோ, இதனால் கொதிப்படைந்தனர்.
இப்போது, எம்ஜிஆர் வேஷம் கட்டிப் பார்க்கிறார். இப்படியாக படிப்படியாக, தேர்ந்த உள்நோக்கத்துடன் விஜய்யை அரசியல் நோக்கத்துடன் வளர்த்தெடுத்ததால்தான், மெர்சல் பிரச்னையில் சிக்கிக் கொண்டது.
பார்ப்போம்... அடுத்து வரும் ஆளப் போறான் தமிழன் எந்த விதமான பிரச்னைகளை தமிழகத்தில் ஏற்படுத்தப் போகிறார் என!
