நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை வருகிற 11-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க ஆலந்தூர் மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டு இருக்கிறார்.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு பதிவு நடைபெற்ற கடந்த 19ஆம் தேதி கள்ள ஓட்டு போட முயன்றதாக குற்றம்சாட்டி திமுக பிரமுகரை தாக்கி, சட்டையை கழற்றி அவமானப்படுத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யபட்டு தற்போது புழல் சிறையில் உள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த வழக்கில் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவை கடந்த வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி அல்லி, தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்க முடியாது எனவும், கைதாகி சில நாட்களே ஆவதாலும், விசாரணை இன்னும் ஆரம்பகட்டத்தில் இருப்பதால் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஜெயக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் புகார் அளித்தவர் தற்போது நல்ல நிலையில் உள்ளதாகவும் உடலில் காயங்கள் இல்லை எனவும் அப்படி உள்ள நிலையில் கொலை முயற்சி வழக்காக பதிவு செய்தது தவறு எனவும் மருத்துவ அறிக்கையிலும் காயங்கள் இல்லை என தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும், அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கு பதிவு செய்யபட்டுள்ளதாகவும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிறகு தொடர்ந்து காவல்துறை வேறு வேறு வழக்குகளில் கைது செய்வதாகவும் இதனை முதன்மை அமர்வு நீதிமன்றம் கருத்தில் கொள்ளாமல் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளதால் இந்த வழக்கில் ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி பெங்கியப்பன் முன்பு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ பன்னீர் செல்வம் நேற்று காலை புழல் சிறைக்கு சென்றார். அவருடன் வைத்திலிங்கம், கே பி முனுசாமி உள்ளிட்டோரும் உடன் சென்றிருந்தனர். வரும் 7 ஆம் தேதி ஜெயக்குமார் வழக்கு விசாரணைக்கு வரும் போது அவர் விடுவிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுகிறது. மேலும் ஜெயக்குமாரை விடுவிப்பதற்காக அதிமுக சார்பில் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்து இருக்கிறது.