கடந்த 2014 ஆம் ஆண்டு மு.க.அழகிரி திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். கருணாநிதியின் மறைவுக்கு பின், தன்னை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ள, ஸ்டாலினுக்கு  பல நெருக்கடிகள் கொடுத்தார். ஆனால், அவரை கட்சியில் சேர்ப்பதில்லை என்பதில், ஸ்டாலின் உறுதியாக உள்ளார்.இதனால், தன் பலத்தை நிரூபிக்கும் வகையில், தன் தந்தையின் தொகுதியான திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களில், தி.மு.க.,வுக்கு போட்டியாக களமிறங்க முடிவு செய்துள்ளார்.

 அண்மையில், திருவாரூர் சென்ற அழகிரி, 'ஆதரவாளர்கள் விரும்பினால், திருவாரூரில் போட்டியிடுவேன்' என்று பகிரங்கமாக அறிவித்தார். இதனால், மிரண்டு போன, தி.மு.க., தலைமை, உடனடியாக, முன்னாள் அமைச்சர் நேருவை, திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் பொறுப்பாளராக, அறிவித்தது.

இடைத்தேர்தலில் அழகிரியோ, அவரது ஆதரவாளர்களோ போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்நிலையில் இடைத்தேர்தல் செலவை சமாளிக்க, மதுரையில் தன் பெயரில் உள்ள, ஐந்து மாடி கட்டடத்தை விற்க அழகிரி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மதுரை, மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் எதிரே, 'தயா சைபர்பார்க்' என்ற பெயரில், ஐந்து மாடி பிரமாண்ட கட்டடம், அழகிரி பெயரில் உள்ளது. இந்த கட்டடம், 1.20 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது.

இதில், சாப்ட்வேர் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.இந்த கட்டடத்தைத்தான், இடைத்தேர்தல் செலவுக்காக அழகிரி விற்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கட்டடத்தை, 70 கோடி ரூபாய்க்கு விற்பதற்காக ரியல் எஸ்டேட் புரோக்கர்களிடமும், தன் நெருங்கிய ஆதரவாளர்களிடமும் பேசி உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அழகிரியை சமாளிக்க திமுக புதிய வியூகம் அமைக்கவுள்ளது.