திமுக தலைவர் கருணாநிதி மறைந்த  மூன்றாவது நாளே அவரது சமாதியில் பேட்டியளித்த மு.க.அழகிரி, தன்னை திமுகவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், திமுக தொண்டர்கள் அனைவரும் தனது பக்கம்தான் உள்ளனர் என்றும் கொளுத்திப் போட்டார்.

ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத ஸ்டாலின், கடந்த 28 ஆம் தேதி நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் தன்னை திமுக தலைவராக முடிசூட்டிக் கொண்டார். இதனால் கடுப்பான அழகிரி நேற்று முன்தினம் கருணாநிதியின் 30 ஆவது நினைவு நாளில் அமைதிப் பேரணி ஒன்றை நடத்திக் காட்டி ஸ்டாலினுக்கு தன்னுடைய மாஸை காட்டினார்.

இதையடுத்து தொடர்ந்து ஸ்டாலினுக்கு எதிராக பல வேலைகளை அழகிரி செய்து வருகிறார்.

இதனிடையே கருணாநிதி மற்றும் ஏ.கே,போஸ் ஆகியோர் மறைந்ததால் திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக, அதிமுக, அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் ஆகிய கட்சிகள் இதில் தங்கள் பலத்தைக் காட்ட தீவிரமாக பணியாற்றி வருகின்றன.

இந்நிலையில் ஒரு ஆங்கில தொலைக்காட்சியின் பெண் நிருபருக்கு பேட்டி அளித்த மு.க.அழகிரி, திருவாரூரில் திமுக ஜெயிக்க முடியாது என்றும், திருப்பரங்குன்றத்தில்  திமுக 4 ஆவது இடத்தில்தான் வரும் என்றும் சவால் விடுத்துள்ளார். அந்த தேர்தல்களில் திமுக தோற்ற பின்னர் தான் தன்னுடைய பலம் ஸ்டாலினுக்கு தெரியும் என்றும் அழகிரி காட்டமாக தெரிவித்துள்ளார்.