மகாராஷ்டிராவில் அதிரடித் திருப்பமாக பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் 2-வது முறையாக முதல்வராக இன்று காலை பதவி ஏற்றார்.
துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் பதவிஏற்றார். அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து 30 எம்எல்ஏக்களுடன் பாஜகவுக்கு ஆதரவு தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு கடந்த மாதம் 21-ந் தேதி தேர்தல் நடந்தது. 24-ந்தேதி வெளியான தேர்தல் முடிவு பெரும் அரசியல் மாற்றத்துக்கு வித்திட்டது. ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில், பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி 161 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.
முதலமைச்சர் பதவியை சுழற்சி முறையில் தலா 2½ ஆண்டுகள் பகிர்ந்து கொள்வது என தேர்தலுக்கு முன்பே பேசி முடிவு செய்யப்பட்டதாக சிவசேனா கூறியதை பாரதீய ஜனதா திட்டவட்டமாக மறுத்தது. இதனால் அக்கட்சிகள் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, ஏற்பட்ட அரசியல் குழப்பங்களால், எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாமல் போனதால் கடந்த 12-ந் தேதி மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல் ஆனது.
இந்த நிலையில் பாரதீய ஜனதாவுடன் சுமார் 30 ஆண்டு கால கூட்டணி உறவை முறித்துகொண்ட சிவசேனா தனது தலைமையில் புதிய அரசு அமைப்பதற்காக காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்நிலையில் நேற்று மாலை 3 கட்சி தலைவர்களும் ஆட்சி அமைப்பது குறித்து இறுதி முடிவு எடுக்க தென்மும்பையில் உள்ள நேரு அரங்கத்தில் சந்தித்து பேசினார்கள். இந்த கூட்டத்தில் சிவசேனா சார்பில் உத்தவ் தாக்கரே, சஞ்சய் ராவத், ஏக்நாத் ஷிண்டே, சுபாஷ் தேசாய் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்புக்கு பின்னர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் புதிய அரசு அமைக்க மூன்று கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டு உள்ளது. எனவே அரசுக்கு தலைமை வகிப்பது யார்? என்ற பிரச்சினை முடிவுக்கு வந்து விட்டது. இனி மற்ற விஷயங்கள் குறித்து பேசப்படும்” என்றார்.
இந்நிலையில் திடீரென தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவரும், சரத்பவாரின் மருமகனுமான அஜித் பவார், 30 எம்எல்ஏக்களுடன் பாஜக ஆட்சி அமைச்ச ஆதரவு அளித்துள்ளார். இதையடுத்து அதிரடியாக இன்று அதிகாலை 5,45 மணிக்கு மகாராஷ்ட்ராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டது. பின்னர் தேவேந்திரநாத் பட்நவிஸ் முதலமைச்சராகவும், அஜித் பவார் துணை முதலமைச்சராகவும் பதவி ஏற்றுக் கொண்டனர்.
அஜித்பாவாரின் நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த சரத்பவார் அவசரமாப கட்சியின் கூட்டத்தை கூட்டியுள்ளார். பாஜக சிவசேனாவை உடைக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்ருந்த நிலையில் தற்போது தேசியவாத காங்கிரசை உடைத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது.
Last Updated 23, Nov 2019, 10:23 AM IST