பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்ற பிறகு கடந்த 2015, பிப்ரவரி 28-ல் மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். அப்போது எய்ம்ஸ் மருத்துவமனை ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், தமிழ்நாடு, இமாச்சல பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களில் தொடங்கப்படும் என்ற தகவலை அறிவித்தார்.

அதன்படி, தமிழகத்தில் மதுரைக்கு அருகில் இருக்கும் தோப்பூர் என்ற இடத்தில் ரூ.1,264 கோடி மதிப்பில் 200 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய முடிவானது. இதில் 750 படுக்கை வசதிகளுடன் கூடிய நவீன மருத்துவமனை, 100 எம்.பி.பி.எஸ். இடங்கள், 60 செவிலியர்கள் பயிற்சி பெறும் விதமாகவும், படிப்பதற்கான வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தற்போது இந்தியாவின் 9 முக்கிய நகரங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி கடந்த ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டினார்.

இந்நிலையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை வரும் 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக ரூ.5 கோடி முதல் கட்டமாக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது என பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போது 16 கோடி ரூபாய் செலவில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சுற்றுக் சுவர் கட்டப்பட்டடு வருகிறது. இதே போல் எய்ம்ஸ் மருத்துமனை அமைக்கப்படும் இடத்திலிருந்தது  கரடிக்கல் வரை இரு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.