AIADMKs Dinakaran Questioned For Over 10 Hours. Summoned Today Too
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் அளிக்கப்பட்ட வழக்கில் இரண்டாவது நாளாக ஆஜரான டிடிவி.தினகரனிடம் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் 10 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
கடந்த 17ஆம் தேதி டெல்லியிலுள்ள தனியார் விடுதியில் சுகேஷ் சந்திரா என்பவர் 1.30 கோடி ரூபாய் பணத்துடன் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுத்ததாக அதிமுக பொதுச்செயலாளர் தினகரன் மீது டெல்லி குற்றவியல் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
அதன்படி, தினகரனுக்குச் சம்மன் அனுப்ப முடிவு செய்து, ஏப்ரல் 19ஆம் தேதி இரவு டெல்லி குற்றவியல் உதவி கமிஷனர் சஞ்சய் ஷெராவத் தலைமையில் போலீஸார், சென்னை அடையாறிலுள்ள தினகரன் இல்லத்தில் அவரைச் சந்தித்து சம்மனை அளித்தனர். மேலும் ஏப்ரல் 22ஆம் தேதி டெல்லி போலீஸார் முன் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமெனவும் தெரிவித்தனர்.

இதற்கிடையே விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து மூன்று நாள்கள் விலக்கு அளிக்க வேண்டுமென தினகரன் தரப்பிலிருந்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஆனால், போலீஸ் தரப்பில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதைதொடர்ந்து, ஏப்ரல் 22ஆம் தேதி டெல்லி குற்றவியல் போலீஸ் முன்பு தினகரன் தன்னுடைய வழக்கறிஞர்கள் முன்னிலையில் விசாரணைக்காக ஆஜரானார். முதல் நாள் விசாரணை 7 மணி நேரம் நீடித்தது. அப்போது அவரிடம் 350 கேள்விகளை அதிகாரிகள் கேட்டதாகக் கூறப்படுகிறது. தினகரனின் நண்பர் மற்றும் அவரது உதவியாளரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்தச் சூழலில் இரண்டாவது நாள் விசாரணைக்காக தினகரன் நேற்று ஆஜரானார் பிற்பகல் ஆரம்பித்த விசாரணை நள்ளிரவு 1 மணி வரை நீடித்தது. டெல்லியில் தினகரனுக்கு உள்ள தொடர்புகள், அவருக்கு வந்த தொலைபேசி அழைப்புகள், உள்ளிட்ட பல்வேறு கோணங்களிலும் போலீசார் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர்.
இரவு 1.30 மணிவாக்கில் தினகரன் வெளியேற அனுமதிக்கப்பட்டது. இருப்பினும் மூன்றாவது நாள் விசாரணைக்காக இன்று மாலை 4 மணிக்கு ஆஜராகும்படி காவல்துறை உத்தரவிட்டுள்ளது. லஞ்ச வழக்கில் வகையாக சிக்கியுள்ள தினகரன் கைது செய்யப்படவே வாய்ப்பு என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.
