கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மதுரையில் மு.க.அழகிரி முழுக்க முழுக்க மு.க.ஸ்டாலினை பற்றிதான் பேசினார். அதற்கு மு.க.ஸ்டாலின்தான் பதில் சொல்ல வேண்டும். இதில் நாங்கள் எந்தக் கருத்தும் சொல்ல முடியாது. சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவித்த பின்புதான் கூட்டணி கட்சிளுக்கு எவ்வளவு இடம் ஒதுக்கீடு என்று அதிமுக தலைமை கழகம் முடிவு செய்யும்.

 
ஆட்சிக்கே கூட வர முடியாது என்று தெரிந்த கட்சிகளும், லெட்டர்பேடு கட்சிகளும்கூட நாங்க ஆதரவு கொடுத்தால்தான் யாரும் ஆட்சிக்கு வர முடியும் என்று கூறுவார்கள். அது அவர்களுடைய உரிமை. நாடாளுமன்ற தேர்தலின்போது அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த கட்சிகள் எல்லாம் தற்போது வரை கூட்டணியில் தொடர்கிறது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 200 தொகுதிக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். 
திரைத்துரையினரின் பல்வேறு கோரிக்கைகளை இந்த அரசு நிறைவேற்றியுள்ளது. கொரோனா காலத்தில் திரைத்துறையினர் வைத்த கோரிக்கைகளை ஏற்று பல்வேறு தளர்வுகளை முதல்வர் அறிவித்துள்ளார். கொரோனா தமிழகத்தில் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு முன்னணி நடிகர்களின் படம் வெளியாகிறது. 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்கு திறக்க அனுமதிக்க வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கை ஏற்கப்பட்டு 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க முதல்வர் அனுமதி அளித்துள்ளார்” என்று கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.