நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூடுதல் இடங்கள் கிடைத்தாலும், கொங்கு மண்டலத்தில் அதிக இடங்களை கைப்பற்றி அதிமுக மீண்டும் தனது கோட்டை என நிரூபித்துள்ளது.

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு மண்டலம் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே அதிமுகவின் எக்கு கோட்டையாக இருந்து வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொங்கு மண்டலத்துக்கு தனி கவனம் செலுத்தி வந்தார். ஒவ்வொரு தேர்தலிலும் அதிமுகவுக்கு கைகொடுக்கும் மாவட்டங்களாக அந்த மாவட்டங்கள் திகழ்ந்து வருகிறது.

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது அதிமுக ஆட்சி அமைக்க கொங்கு மண்டலம் தான் கைகொடுத்தது. கோவை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளில் அதிமுக 9 தொகுதிகளை கைப்பற்றியது. இதேபோன்று மற்ற மாவட்டங்களிலும் அதிமுக ஆதிக்கம் செலுத்தியது. இந்நிலையில், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் கோட்டையை திமுக உடைத்தது. இம்மண்டலங்களில் யாரும் எதிர்பாராத விதமாக, திமுக கூட்டணி எம்.பிக்கள் மாபெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றனர். இனி கொங்கு மண்டலம் அவ்வளவுதானா என்ற கேள்வி அதிமுகவினர் மத்தியில் எழுந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் 2 கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில், கொங்கு மண்டலத்தில் அதிகளவில் வெற்றி பெற்று மீண்டும் அதிமுக கோட்டை என நிரூபித்துள்ளது. கரூர், கோவை, சேலம், நாமக்கல், திருப்பூர், தர்மபுரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் அதிமுக பெருமளவு வெற்றி பெற்றுள்ளது. நீலகிரியில் மட்டும் திமுக ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இந்த வெற்றிக்கு முக்கியமாக கொங்கு மண்டலத்தை சேர்ந்த அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் முக்கிய பங்காற்றியதாக கூறப்படுகிறது.