ஜெயலலிதா இருந்தபோது அவரது நிழலை பார்த்தே நடு நடுங்கினார்கள் அ.தி.மு.க.வின் நிர்வாகிகள். ஆனால் அவர் மறைவுக்குப் பின் ஆளாளுக்கு ஜெயலலிதாவாகிவிட்டார்கள்! என்று விமர்சனங்கள் வெடிக்கின்றன. 

சுயநலனுக்காக கட்சியின் பெருமையை அடகு வைக்கிறார்கள்! என்று நிர்வாகிகளைப் பார்த்து தொண்டர் கூட்டம் குமுறுவதும் உண்மையே. ’உங்களையெல்லாம் அம்மாவோட ஆன்மா சும்மாவிடாது!’ என்று தொண்டர்களிடம்  சாபம் வாங்கி கட்டிய நிர்வாகிகளும் உண்டு.  இந்நிலையில், ஜெயலலிதாவின் இரண்டாமாண்டு நினைவு நாளான நேற்று, அ.தி.மு.க.வின் தலைமை நிர்வாகிகள் சிலருக்கு ஏற்பட்ட உயிர்பயம்! தொண்டர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையில் ஜெ.,வுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெளன ஊர்வலம் நடைபெற்றது. இதில் எடப்பாடியார், பன்னீர்செல்வத்தில் துவங்கி அனைவரும் கலந்து கொண்டு நடந்து சென்றனர். அப்போது ஆன் தி வேயில் மாஜி தொழிற்துறை அமைச்சர் மோகன் மயக்கமடைந்து சரிந்தார். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி, உறுதிமொழி ஏற்ப்பு முடிந்ததும் அவைத்தலைவர் மதுசூதனன் மயங்கினார். அவருக்கு அடுத்து சிட்டிங் ராஜ்யசபா எம்.பி. ஏ.கே. செல்வராஜுக்கு மயக்கம் வந்தது, அவர் சாய்ந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேனுக்கு மயக்கம் வந்தது.

 

இப்படி முக்கிய தலைகள் ஆளாளுக்கு மயங்கி சாய, பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. செல்வராஜை, அமைச்சர் வேலுமணி தன் காரில் ஏற்றிக்கொள்ள, மதுசூதனனை ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பினார்களாம். தமிழ்மகன் உசேனை அவசரத்துக்கு போலீஸ் ஜீப்பில் ஏற்றி, அழைத்துச் சென்றார்களாம். இந்த பரபர சூழலில், ’ துணை முதல்வர் தோரணையில இருக்கிறார் பன்னீர்செல்வம். இந்த வயசிலும் ஆதாயம் தேடி எடப்பாடியாரிடம் சாயாம, தன்னோட அணியில நின்னு தோள் கொடுக்கிற மதுசூதனனுக்கு அவசரத்துல கைகொடுத்தாரா பாரு? முதல்வர், துணை முதல்வர் அப்புறம் அமைச்சர்கள் எல்லாம் பல லட்சம் ரூபாய் மதிப்புல கார்கள் வெச்சிருக்காங்க. ஆனா அவைத்தலைவரை ஆட்டோவுல அனுப்புறாங்க.” என்று சில கொதி குரல்கள் கேட்டது. 

ஆனால் அதையும் தாண்டி, ”இந்த திடீர் மயக்கம், தலைசுத்தலுக்கு காரணம் அம்மாவோட கோபம்தான்.  தன்னோட ஆட்சியையும், கட்சியையும் வெச்சுக்கிட்டு இவங்க அடிக்கிற கூத்தையும், தன் பெயரை கெடுக்கிறதையும் தாங்காமதான் இந்த பயத்தை காட்டியிருக்காங்க. சாய்ஞ்சது மாஜிக்கள்தானே?ன்னு சிலர் பைத்தியக்காரத்தனமா கேட்கிறாங்க. ஏ.கே. செல்வராஜ் சிட்டிங் எம்.பி.! லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு ஏற்கனவே நெஞ்சு பிரச்னையாகி ஆஞ்சியோகிராம் பண்றளவுக்கு போயிட்டார். 

இதெல்லாம் அம்மா தான் கோபமா இருக்கிறதை காட்டுற அறிகுறிகள். இனியாவது நம்ம கட்சி புள்ளிங்க ஆட்டத்தை குறைக்கணும். இல்லேன்னா இன்னைக்கு வெறும் பயத்தை காட்டிய அம்மாவோட சக்தி அதையும் தாண்டி வேலையை காட்டிடும்.” என்று சிலர் கிளப்பிவிட்டனர். இதை கோடிட்டுக் காட்டும் அரசியல் விமர்சகர்கள், ஜோதிடம், ஜாதகம், அமானுஷ்யம்!ன்னு ஜெயலலிதா நம்புன மாதிரியே அவரோட தொண்டர்களும் அவரோட ஆன்மா சுத்துதுன்னு நம்புறாங்க. இதை வெறும் சிரிப்போட கடந்து போக முடியலை, இதன் பின்னணியில் மாபெரும் கழகத்தோட வீழ்ச்சி அரசியல் இருக்குது! என்கிறார்கள். அதுவும் சரிதான்!