ஜெயலலிதாவின் போயஸ் இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா கூறியுள்ளார்.

சென்னை போயஸ் கார்டன் பகுதியில் மறைந்த முதல்வர் ஜெ., வசித்த 'வேதா இல்லம்' உள்ளது. இதை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கு ஜெ., வாரிசுதாரர்களான அவரது அண்ணன் மகள் தீபா, அவரது சகோதரர் தீபக் ஆகியோர் ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், வேதா இல்லத்தை அரசுடைமையாக்கப்பட்டதாக தமிழக அரசு அறிவித்தது.

ஜெயலலிதா வீட்டை அரசுடைமை ஆக்கவதற்கு எதிர்ப்பி தெரிவித்து சென்னை தி.நகரில் உள்ள இல்லத்தில் ஜெ.தீபா செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- எங்கள் அத்தை ஜெயலலிதா வசித்த வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை. வேதா இல்லத்தை கோயிலாக நினைக்கலாம், ஆனால் கோயிலாக மாற்ற முடியாது. ஜெயலலிதாவின் போயஸ் இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம். இது எங்களுடைய பூர்வீக சொத்து. என்னையும், என் சகோதரன் தீபக்கையும் ஜெ. சொத்துக்கு வாரிசு நாங்கள் தான் என நீதிமன்றமே அங்கீகரித்துள்ளது.

எங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் வேதா இல்லத்தில் தான் நடந்துள்ளன. எங்களுக்கு பணம் தேவையில்லை. தமிழக அரசு எங்கள் சொத்துகளை அபகரித்துள்ளது. வேதா இல்லத்தில் உள்ள பொருட்கள் விவரம் குறித்து எங்களுக்கு தெரிவிக்கவில்லை. நிலத்தை கையகப்படுத்த மட்டுமே அரசால் முடியும்; பொருட்களை எடுக்க முடியாது. அதிமுக தலைமை அலுவலகத்தை நாங்கள் எடுத்து கொண்டோமா? அல்லது வழக்கு தொடர்ந்தோமா? தன்னை சுற்றி இருந்த பிரச்சனைகளால் ஜெயலலிதா உயில் எழுதி வைக்கவில்லை. ஜெயலலிதா மரணம் எதிர்பாராத ஒன்று. 

ஜெயலலிதாவின் போயஸ் இல்லம் விவகாரத்தில் நியாயம் கிடைக்க வேண்டும். அதற்கு அதிமுக தொண்டர்கள் துணை நிற்க வேண்டும். எங்கள் தரப்பு நியாயங்களை அரசு கருத்தில் கொள்ளவில்லை. ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை அருங்காட்சியகம் ஆக்குவதில் மக்களுக்கு என்ன பயன்? சமூக சேவை நிறுவனங்களை ஜெயலலிதா பெயரில் அதிமுக தொடங்காதது ஏன்? தேர்தல் பிரசாரத்தில் மட்டும்தான் ஜெயலலிதா பெயரை உச்சரித்தார்கள் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.