வரும் மக்களவை தேர்தலில் பாஜகவோடு அதிமுக கூட்டணி அமைத்தால் டெபாசிட் கூட கிடைக்காமல் மோசமான தோல்வியை சந்திக்கும் என அமமுக துணைப் பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் அதிரடியாய் தெரிவித்துள்ளார்.  

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’காங்கிரசுடன் நாங்கள் சேருவோம் என்கிறார்கள். நான் ஏற்கனவே தேசிய கட்சிகளோடு கூட்டணி வைக்கமாட்டேன் என்று கூறி இருக்கிறேன். அதில் உறுதியாக இருக்கிறேன். ஆகவே தேசிய கட்சிகளுடன் அமமுக நிச்சயமாக கூட்டணி அமைக்காது. மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை நாடகம் ஆடுகிறார். முதல்வர் பதவி கிடைக்காத விரக்தியில், தொடர்ச்சியாக பாஜகவை விமர்சித்து வருகிறார். அவர் அதிமுக ஆட்சியை கலைக்க விரும்புகிறார். கஜா புயல் பாதித்த இடங்களுக்குன் அமைச்சர்களே செல்ல முடியாத நிலை அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. 

வரும் தேர்தல்களில் அதிமுகவுக்கு டெபாசிட் கூடக்கிடைக்காது.  தமிழக நலனை கருத்தில் கொண்டு செயல்பட்டவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அவரது வழியில் பயணித்து வருகிறோம். தமிழகத்தின் தேவைகளை உணர்ந்திருக்கிறோம். மக்களும் அமமுகவை நம்புகிறார்கள். இது நாடாளுமன்றத் தேர்தலிலும், அடுத்தடுத்து வர்யும் தேர்தல்களிலும் பிரதிபலிக்கும். திமுகவை பொறுத்த வரை கூட்டணி அமைக்க தலையை காங்கிர்ஸுக்கும், வாலை பாஜகவுக்கும் காட்டி இரட்டைவேடம் போட்டு வருகிறது.

 

பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் அதிமுக டெபாசிட் கூட வாங்காது. அதிமுகவுடன் பிற கட்சிகள் கூட்டணி சேர்ந்தால் அந்தக் கட்சிகளின் நிலை படுபாதாளத்திற்கு சென்று விடும்’’ என அவர் தெரிவித்தார்.