Asianet News TamilAsianet News Tamil

தமிழ் இனத்தை அழிக்க வந்த கோடரிக்காம்பு தான் எடப்பாடி... தர லோக்கலாக இறங்கி விளாசிய மு.க.ஸ்டாலின்..!

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து வாக்களிக்கத் திராணியின்றி பா.ஜ.க. 'ஆதரவு' கேட்கும் முன்பே 'கைதூக்கி' விட்டு இன்னொரு பக்கம் 'நாங்கள் இரட்டைக் குடியுரிமையை வலியுறுத்துவோம் என்று நாடகமாடிக் கொண்டிருக்கிறது அ.தி.மு.க. அரசு. பா.ஜ.க.வின் கொள்கைதான் அ.தி.மு.க.வின் கொள்கை என்றால், தனியாக ஒரு கட்சி எதற்கு? அதில் பேரறிஞர் அண்ணாவின் பெயர் எதற்கு? அ.தி.மு.க.,வை கலைத்து விட வேண்டியதுதானே.

AIADMK supporting citizenship amendment bill...mk stalin Condemned
Author
Tamil Nadu, First Published Dec 12, 2019, 11:14 AM IST

பா.ஜ.க.வின் கொள்கைதான் அ.தி.மு.க.வின் கொள்கை என்றால், அதில் பேரறிஞர் அண்ணாவின் பெயர் எதற்கு என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் ''குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவிற்கு மக்களவையிலும், மாநிலங்களவையிலும் ஆதரவு தெரிவித்து, சிறுபான்மையினர் மற்றும் ஈழத் தமிழர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகம் இழைத்திருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

AIADMK supporting citizenship amendment bill...mk stalin Condemned

சீரழிந்து கொண்டிருக்கும் பொருளாதாரப் பிரச்சனைகளைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல், மதவெறிக் கொள்கைகளில் மட்டும் கவனம் செலுத்தி, நாட்டு மக்களிடையே பேதத்தையும் பிளவையும் ஏற்படுத்தி இந்திய அரசியல் சட்டத்தின் 'மதச்சார்பற்ற தன்மை', 'சமத்துவம்', 'சகோதரத்துவம்' ஆகிய அத்தனை அடிப்படை அம்சங்களின் வேர்களையும் அடியோடு பிடுங்கி எறியும் விதத்தில், மக்கள் நம்பி அளித்த தனிப்பெரும்பான்மையை தாறுமாறாகப் பயன்படுத்தும் மத்திய பாஜக அரசின் எல்லாக் காரியங்களுக்கும் துணையும் நின்று வாக்கும் அளித்து, தன் பதவி காப்பாற்றப்பட்டால் போதும் அடிக்கும் பகல் கொள்ளைகளைக் கண்டு கொள்ளாமல் இருந்தால் போதும் என்ற நிலையில் இருக்கும் எடப்பாடி பழனிசாமியின் பதவிக்காலம், தமிழகச் சரித்திரத்தின் கற்காலமாகிவிட்டது.

மாநிலங்களவையில் பேசிய அதிமுக உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், இலங்கையை விட்டு விட்டீர்கள். இஸ்லாமியர்களை விட்டு விட்டீர்கள். ஆனாலும் நாங்கள் இந்தச் சட்டத்தை ஆதரிக்கிறோம் என்று கூறி அதிமுகவின் இரட்டை வேடத்தை தன்னை அறியாமல் அவையிலேயே அரங்கேற்றியிருக்கிறார். தமிழர்கள் தலையில் மிளகாய் அரைக்கப் பார்க்கிறது அதிமுக என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? குடியுரிமைச் சட்டத்தை எதிர்க்க முதுகெலும்பு இல்லாமல் பயந்து போய், பணிந்து கிடக்கும் அதிமுக அரசை அடிமை அரசு என்று கூறாமல் வேறு எப்படி அழைக்க முடியும்? அ.தி.மு.க. அரசை, அடிமை அரசு, தமிழ் இனத்திற்குக் கேடு தர வந்த 'கோடரிக்காம்பு' என்றுதான் சரித்திரம் பதிவு செய்யும். 

AIADMK supporting citizenship amendment bill...mk stalin Condemned

தமிழக நலன்களில் அக்கறை செலுத்துவது போலவும், ஈழத்தமிழருக்காகக் குரல் கொடுப்பது போலவும் போட்ட அ.தி.மு.க.வின் வேடங்கள் எல்லாம் கலைந்து விட்டன. குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு அ.தி.மு.க. ஆதரவளித்ததன் மூலம், இதுவரை பொய்த் தோற்றமாக உருவாக்கி வந்த 'அ.தி.மு.க.வின் ஈழத் தமிழர் ஆதரவு என்ற சாயம் அறவே கரைந்து வெளுத்து விட்டது. இந்தியா முன்னின்று நடத்திய பேச்சுவார்த்தையின் விளைவாக உருவான 13-வது அரசியல் சட்டத் திருத்தத்தை செயல்படுத்தவே முடியாது என்று, இந்திய மண்ணில் நின்று, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கொக்கரித்தபோது அதுபற்றி எதிர்க்கருத்து கூட சொல்ல அஞ்சி ஒடுங்கி, எங்கோ ஒரு பொந்தில் ஒளிந்து கொண்டார் முதலமைச்சர் பழனிசாமி.

இப்போது குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து வாக்களிக்கத் திராணியின்றி பா.ஜ.க. 'ஆதரவு' கேட்கும் முன்பே 'கைதூக்கி' விட்டு இன்னொரு பக்கம் 'நாங்கள் இரட்டைக் குடியுரிமையை வலியுறுத்துவோம் என்று நாடகமாடிக் கொண்டிருக்கிறது அ.தி.மு.க. அரசு. பா.ஜ.க.வின் கொள்கைதான் அ.தி.மு.க.வின் கொள்கை என்றால், தனியாக ஒரு கட்சி எதற்கு? அதில் பேரறிஞர் அண்ணாவின் பெயர் எதற்கு? அ.தி.மு.க.,வை கலைத்து விட வேண்டியதுதானே!

AIADMK supporting citizenship amendment bill...mk stalin Condemned

தங்களை அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்று சொல்லிக் கொண்டு ஓ.பன்னீர்செல்வமும் மற்றும் பழனிசாமியும், உண்மையான அ.தி.மு.க. தொண்டர்களை ஏமாற்றுவது ஏன்? வளர்ச்சி, முன்னேற்றம் என்றெல்லாம் வாக்குகளைப் பெற்று - தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருக்கும் பா.ஜ.க.விற்கு, இந்தியாவில் பேயாட்டம் போடும் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்க முடியவில்லை. சீரழிந்து வரும் பொருளாதாரத்தை மீட்டு செம்மைப்படுத்த இயலவில்லை. பேராபத்தில் இருக்கும் பெண்களின் பாதுகாப்பினை மீட்டு நாடெங்கும் வாழும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்திட முடியவில்லை.

ஆனால், மதவெறிக் கொள்கைகளைத் தூக்கிப் பிடிப்பதிலும், நாட்டை மத அடிப்படையில் பிரித்தாள்வதிலும், சிறுபான்மையினரை அச்சத்திலும், பீதியிலும் உறைய வைப்பதிலும் எல்லாவற்றிற்கும் மேலாக தமிழர்களின் உரிமைகளை நசுக்குவதிலும், தணியாத தாகங்கொண்டு பா.ஜ.க. ஆட்சி நடத்துகிறது. 2014, 2019 ஆகிய இரு மக்களவைத் தேர்தல்களிலும் நாட்டு மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை பிரதமர் மோடி மீறி, ஒரு சர்வாதிகாரத் தன்மையுடன் தனக்குக் கிடைத்த மெஜாரிட்டியைப் பயன்படுத்தி வருவது, அரசமைப்புச் சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் பேராபத்தாகும். சாதி, மத, இன வேறுபாடுகள் என அனைத்தையும் கடந்து, இந்தியர்கள் அனைவருக்கும் பிரதமர் என்பதையும் அவர் மறந்து, தனிப்பட்ட சில வடமாநிலங்களுக்கு மட்டுமே பிரதமர் என்ற எண்ணத்தில் அவர் செயல்படுவதும், 'மத நல்லிணக்கம்', 'சகோதரத்துவம்', 'சமத்துவம்' போன்ற வார்த்தைகள் எல்லாம் ஏதோ 'வாக்கு வங்கி அரசியல்' அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று செயல்படுவதும், மிகுந்த வேதனையளிக்கிறது.

குடியுரிமைச் சட்டத் திருத்தத்தில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷை நினைவில் வைத்திருக்கும் பிரதமர் மோடி அவர்கள், இலங்கையை மறந்து விட்டார் ; அங்குள்ள ஈழத் தமிழர்களை அறவே மறந்து விட்டார். இங்குள்ள சிறுபான்மையின மக்களையும் மறந்துவிட்டார். குடியுரிமைச் சட்டத் திருத்தத்தில் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு போட்ட 'முத்தலாக்' வேடம் கலைந்து விட்டது. "குடியுரிமை வழங்குவதில் இந்துக்களுக்கு ஒரு விதி, இஸ்லாமியர்களுக்கு ஒரு விதி, கிறிஸ்துவர்களுக்கு ஒரு விதி என்று விவாதிப்பது அபத்தமானது” என்று அரசியல் நிர்ணய சபையிலேயே வாதிட்டவர், பிரதமராக இருந்த பண்டித நேரு அவர்கள்.

குடியுரிமையில் இன ரீதியாக, மத ரீதியாக நாம் பாகுபடுத்திப் பார்க்க முடியாது” என்றவர் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் அவர்கள். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி அவர்களோ, மத அடிப்படையில் குடியுரிமை வழங்கும் சட்டத்தை நிறைவேற்றி - “இது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது” என்கிறார் என்றால், நாடு எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது? ஜனநாயகத்தை மீட்கப் போராடிய மறைந்த 'லோக் நாயக்' ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்களின் "வினாச காலே விபரீத புத்தி” என்ற வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன!

AIADMK supporting citizenship amendment bill...mk stalin Condemned

ஆகவே, மதநல்லிணக்கத்திற்கு எதிரான பா.ஜ.க.வுடன், சுயநல அடிப்படையில் கூட்டணி அமைத்து - ஈழத் தமிழர்களின் குடியுரிமையைக் காவு கொடுத்து - குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு வாக்களித்துள்ள அ.தி.மு.க., இனி ஈழத்தமிழர் நலன் பற்றியோ, “சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு அரணாக இருப்போம்” என்றோ 'பகட்டாக'ப் பேசி, மேலும் மேலும் அழிக்க முடியாத துரோகங்களை - வரலாற்றுப் பிழைகளைச் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். ஈழத் தமிழர்களுக்கும், சிறுபான்மையினருக்கும் அச்சம் ஏற்படுத்தியுள்ள இந்த அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியின் உண்மை முகத்தை திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து உணர்த்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios