இரவெல்லாம் அவர் தூங்குவதே இல்லை என்று கட்சிக்காரர்கள் சொல்வதை கேட்க முடிகிறது. 2 மணிக்குகூட போன் செய்து தேர்தல் பணிகளை விசாரிக்கிறார் என கட்சிக்காரர்கள் கூறுகின்றனர்.
ஒரு வார்டில் கூட அதிமுக ஜெயிக்க கூடாது அந்த அளவிற்கு வேலை செய்ய வேண்டும் என கோவை உ.பிக்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு போட்டு உள்ளதாகவும், கோவையில் அதிமுகவை வாஷ் அவுட் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் அவர் வேலை செய்து வருவதாகவும் துக்ளக் பத்திரிக்கை செய்தியாளர் இதயா தெரிவித்துள்ளார்.
கொங்கு மண்டல நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து செய்தி சேகரிக்க கோவையில் முகாமிட்டுள்ள மூத்த பத்திரிக்கையாளர் இதயா இந்த தகவலை கூறியுள்ளார்.அதிமுகவாக இருந்தாலும் சரி, அது திமுகவாக இருந்தாலும் சரி, தனக்கென தனி முத்திரை பதிப்பதில் செந்தில் பாலாஜிக்கு நிகர் செந்தில்பாலாஜி தான். வெட்டிக்கொண்டு வா என்றால் கட்டிக்கொண்டு வருவார் அந்த அளவிற்கு கெட்டிக்காரர் அவர். கட்சித் தலைமை உத்தரவிட்டுவிட்டால் அதை செயல்படுத்தாமல் விடமாட்டார். இதனால் திமுக தலைவர் மு.க ஸ்டாலினின் குட் புக்கில் எப்போதும் செந்தில் பாலாஜிக்கு தனியிடமுண்டு.
முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் இருந்து அமமுக விற்கு சென்று பின்னர் திமுகவுக்கே திரும்பி வந்தவர்தான் செந்தில்பாலாஜி. அவர் கரூர் மாவட்டத்துக்காரர் என்பதால் மாவட்டத்தில் முக்கிய பதவிகளை கொடுத்து பெருமைப்படுத்தினார் ஸ்டாலின். கொடுத்த வேலையை கனகச்சிதமாக முடித்து சாதித்துக் காட்டும் செயல்வீரர் செந்தில் பாலாஜி என ஸ்டாலின் புகழும் அளவிற்கு அவரின் செயல்பாடுகள் இருந்து வருகிறது. திமுகவுக்கு வந்த சில ஆண்டுகளிலேயே அவர் அமைச்சராகியிருப்பது திமுக சீனியர்களுக்கே புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது என்றே சொல்லலாம்.

இந்நிலையில்தான் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியை கைப்பற்றியிருந்தாலும் கொங்கு மண்டலத்தை பொறுத்தவரையில் வாஷ் அவுட் என்றுதான் சொல்ல வேண்டும். கொங்குவில் மொத்தம் பத்து தொகுதிகளை அலுங்காமல் குலுங்காமல் தட்டி தூக்கியது அதிமுக. இப்போது மட்டுமல்ல எப்போதுமே கொங்கு திமுகவுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. இது திமுக தலைமைக்கு பெரும் னத்தாங்களாகவே இருந்து வருகிறது. தற்போது நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கட்டாயம் கொங்கு மண்டலத்தை திமுகவின் கோட்டையாக்கியே தீரவேண்டும் என ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். இதனால் திமுகவில் கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்தை சேர்ந்த பல தலைவர்கள் இருந்தாலும், வேலுமணியை எதிர்த்து களமாடி கொங்கு வை கைப்பற்றக் கூடிய ஒரே ஆற்றல் மிகுந்த தளபதி செந்தில் பாலாஜி தான் என அடையாளம் கண்டிருக்கிறார் முதல்வர், திமுக தலைவர் ஸ்டாலின்.
இந்த உள்ளாட்சி மன்ற தேர்தல் செந்தில்பாலாஜிக்கு அக்னி பரிட்சை ஆகவே கருதப்படுகிறது, ஸ்டாலினை நம்பிக்கையை நிறைவேற்றிகாட்டி அவரது குட் புக்கில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்ற முனைப்பில் செந்தில்பாலாஜி செயல் பட்டுவருகிறார். கோவையை திமுகவின் கோட்டை ஆக்கவேண்டும், சென்னையில் ஒரு தொகுதியில் கூட எதிர்க்கட்சிகள் வெற்றி பெறாதபடி சட்டசபை தேர்தலில் சாதித்ததை போல கோவையிலும் இந்த முறை நகர்ப்புறத்தை நம் வசமாக்க வேண்டும் அதற்காக நிர்வாகிகள் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். அப்படி உழைத்தால் வெற்றி நிச்சயம் என அவர் நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றி, இரவும் பகலும் தேர்தல் பணியாற்றி வருகிறார். இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காவிட்டால் மனம் தளர வேண்டாம், எவரும் அதிருப்தியில் உள்ளடி வேலையில் ஈடுபடாதீர்கள், நிச்சயம் இன்று உழைத்தால் அதற்கான பலன் கிடைக்கும் என்று மனச்சோர்வில் உள்ள தொண்டர்களை ஊக்கப்படுத்தும் வேலையை செவ்வனே செய்து முடித்துள்ளார் செந்தில்பாலாஜி.
இந்நிலையில் நகராட்சி மன்றத் தேர்தலில் தன்னால் இயன்ற அளவுக்கு செந்தில்பாலாஜி சுற்றி சுழன்று வருவதாக ஊடகவியலாளர்கள் பலர் கூறி வருகின்றனர். அதிமுகவின் கோட்டையாக உள்ள கொங்கு மண்டலத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என மறுபுறம் எஸ். பி வேலுமணி தாராளம் காட்டி வருகிறார். இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை, இந்த முறை பிடித்தே ஆக வேண்டும் என்ற முனைப்பில் செந்தில் பாலாஜி தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில் கொங்கு கள நிலவரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் துக்ளக் உதயா கொங்கு மண்டலத்தில் முகாமிட்டு களநிலவரங்களை ஆராய்ந்து வருகிறார். அவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கொங்கு மண்டலத்தை இந்த முறை கைப்பற்றியே ஆகவேண்டும் என செந்தில் பாலாஜி புயலாக செயல்பட்டு வருகிறார் என கூறியுள்ளார்.

மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது:- திமுக கொங்கு மண்டலத்தில் தலைவர்கள் இருந்தாலும் நம்பிக்கைக்குரிய தளபதியாக செந்தில்பாலாஜி ஸ்டாலின் அடையாளம் கண்டுள்ளார். எதையும் துணிச்சலாக எதிர்த்து செயலாற்ற கூடியவர், பொருளாதார ரீதியாக சிறப்பாக செயல்படுபவர், எஸ்.பி வேலுமணிக்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு திறன் கொண்டவர் செந்தில்பாலாஜி என்பதினால் அவரை ஸ்டாலின் களமிறங்கியிருக்கிறார். எஸ்.பி வேலுமணி கோவையை தனது கோட்டையாக மாற்றி வைத்திருக்கிறார் அதை செந்தில்பாலாஜி உடைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார். வழக்கமாக உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு பணம் வாங்கிக் கொண்டு தான் சீட்டு வழங்குவார்கள், ஆனால் செந்தில்பாலாஜி இந்த முறை யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ, யாருக்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறதோ அவர்களுக்கு சீட்டு வழங்கியிருக்கிறார். பணம் அவருக்கு ஒரு பொருட்டில்லை என்பதால் திமுக தலைமை செய்த சர்வே ஒருபுறம் இருந்தாலும், செந்தில்பாலாஜி தனியாக சர்வே எடுத்து அதன் அடிப்படையில் வேட்பாளர்களை தேர்வு செய்திருக்கிறார்.
இரவு பகல் பாராமல் கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களை சந்தித்து தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டு வருகிறார். இதனை அதிமுக தொண்டர்களே மகிழ்ச்சியுடன் கூறி வருகின்றனர். இதனால் கோவை மேயர் பதவி திமுகவுக்கு கிடைக்க வாய்ப்பு அதிகம் இருக்கிறது. பெரும்பாலும் கோவை என்பது அதிகம் படித்தவர்கள் உள்ள பகுதி அவர்களில் பெரும்பாலானோர் ஆளும் கட்சிக்கு வாக்களிப்பது தான் பலனளிக்கும் எனக் கூறுகின்றனர். வீம்புக்கு எதிர்க்கட்சிக்கு ஓட்டுப் போட்டுவிட்டால் பிறகு வார்டில் எந்த பணியும் நடக்காது என்பதை புரிந்து வைத்துக் கொண்டுள்ளனர். பாஜகவும் அதிமுகவும் தனித்தனியே தேர்தலை சந்திக்கின்றன, பாரதிய ஜனதா பல வார்டுகளில் கணிசமான வாக்குகளை வைத்துள்ளது, அது சர்வேயில் தெரிகிறது, இந்நிலையில் அதிமுக பாஜக 2 வாக்குகளும் ஒன்றாக இருந்திருந்தால் வெற்றிபெற வாய்ப்பு இருந்திருக்கும்.

ஆனால் இந்த முறை பிரிந்து நிற்பதால் அது திமுகவுக்கு சாதகமாக மாறியுள்ளது. இதேபோல் செந்தில்பாலாஜியிடம் பொறுப்பு கொடுக்கப்பட்டிருப்பது திமுகவுக்கு பிளஸ். இரவெல்லாம் அவர் தூங்குவதே இல்லை என்று கட்சிக்காரர்கள் சொல்வதை கேட்க முடிகிறது. 2 மணிக்குகூட போன் செய்து தேர்தல் பணிகளை விசாரிக்கிறார் என கட்சிக்காரர்கள் கூறுகின்றனர். கட்சி நிர்வாகிகளை, பொறுப்பாளர்கள் எவரையுமே அவர் தூங்க விடுவதில்லை என்று கூறுகின்றனர். கோயம்புத்தூரில் அதிமுக ஒரு வார்டில் கூட வெற்றிபெற்று விடக்கூடாது என கங்கணம் கட்டிய செந்தில்பாலாஜி செயல்பட்டு வருகிறார். செந்தில் பாலாஜியின் கடுமையான உழைப்பு, ஆளும் கட்சி என்ற கூடுதல் வாய்ப்பு, அதிமுக-பாஜக பிரிந்து நிற்பது என 3 விஷயங்களையும் வைத்துப்பார்த்தால் கோவை மேயர் பதவியை திமுக கைப்பற்றுவது உறுதி என தெரிவித்துள்ளார்.
