மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய நீதிக் கட்சி ஆரணி தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அதிமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

6 தொகுதிகளை உள்ளடக்கியது ஆரணி மக்களவை தொகுதி. இதில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சி, மயிலம் தொகுதியும், திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர், ஆரணி, செய்யார், வந்தவாசி ஆகிய தொகுதிகள் இடம் பெற்றள்ளன. கடந்த மக்களவை தொகுதியில் அதிமுக தனித்து போட்டியிட்டது. இந்நிலையில் ஆரணி தொகுதியில் போட்டியிட்ட சேவல் ஏழுமலை அதிக வாக்கு வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார். திமுக 2-வது இடத்திலும், 3-வது இடத்தை பாமக கட்சி பிடித்தது. 

இந்நிலையில் வருகிற மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. ஆகையால் இந்த தொகுதியில் அதிமுக கட்சி எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் என்று நம்பிக்கையுடன் இருந்து வந்தனர். இந்த தொகுதியில் அ.தி.மு.க.வில் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சகோதரர் ராதாகிருஷ்ணன், தற்போதைய எம்.பி. சேவல் ஏழுமலை, மாநில அமைப்பு செயலாளராக உள்ள முக்கூர் சுப்பிரமணியன் ஆகிய மூவரில் ஒருவர் போட்டியிடுவார்கள் என்று கட்சியினர் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அதேபோல் ஆரணி தொகுதியில் வன்னியர் சமூகத்தினர் ஓட்டு வங்கி அதிகமாக இருப்பதால் எப்படியாவது இந்த தொகுதியை பெற்று விட வேண்டும் என பாமக தரப்பிலும் தீவிரம் காட்டி வந்தனர்.

 

இந்நிலையில் கடந்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் வேலுார் தொகுதியில் போட்டியிட்டு 2-வது இடம் பிடித்த புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம், இந்த முறை தனது சொந்த ஊரான ஆரணி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து விசாரித்த போது வேலுார் தொகுதியில், 20 ஆண்டுகளுக்கு பின், தி.மு.க. நேரடியாக களம் இறங்குகிறது. இங்கு, முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மகன், கதிர் ஆனந்த் போட்டியிட உள்ளதால் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறி என்பதால் ஏ.சி. சண்முகம் தொகுதி மாறி போட்டியிட உள்ளார். மேலும் ஆரணி தொகுதி முதலியார் சமூகத்தினர் பெருமளவு இருப்பதால் இவர் ஆரணி தொகுதியை குறி வைத்துள்ளார். 

வன்னியர்கள் அதிகம் உள்ள தொகுதி என்பதால் இந்த தொகுதியில் பா.ம.க.,வின் அரவணைத்து செல்வதற்காக, சமீபத்தில் பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணியை, சென்னையில் ஏ.சி. சண்முகம் சந்தித்தார். இதன் மூலம் ஆரணி தொகுதி புதிய நீதிகட்சிக்கு செல்வது கிட்டதட்ட உறுதியாகி உள்ளது.