தற்போதைய நிலவரப்படி அதிமுக - திமுக சார்பில் தலா மூன்று ராஜ்யசபா சீட் கிடைக்க வாய்ப்புள்ளது. அதிமுகவில் ஓ.பி.ரவீந்திரநாத் மட்டுமே மக்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாலும், ஓ.பி.எஸ் - எடப்பாடி என அணிகள் உள்ளதாலும் ராஜ்யசபா சீட் யாருக்கு கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  

அதிமுகவில் இருக்கும் கட்சி சீனியர்களுக்கு கொடுக்கலாம் என்று தலைமை ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. அதன்படி கட்சியில் சீனியர்களான தம்பிதுரை, வைத்தியலிங்கம், கே.பி.முனுசாமி ஆகிய மூவருக்கும் வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள். அமைச்சர் ஜெயக்குமார் அவரது மகன் ஜெயவர்தனுக்கும் ராஜ்யசபா சீட் வேண்டும் என வலியுறுத்தி வருகிறாராம்.

கூட்டணி கட்சிகளில் பாமகவிற்கு ஒரு ராஜ்ய சபா சீட் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் பாமக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் தோல்வி அடைந்ததால் ராஜ்ய சபா சீட் கொடுக்கக்கூடாது என தனது நிலையை அதிமுக மாற்றிக் கொண்டுள்ளது. அதிமுக தலைமை  இன்னொரு வகையிலும் யோசித்து வருவதாகக் கூறுகிறார்கள். பாஜகவிற்கு ஒரு ராஜ்யசபா சீட் கொடுத்து விட்டு, அதற்கு பதிலாக மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பெறலாம் என்றும் முடிவெடுத்துள்ளது எனக் கூறுகிறார்கள்.