தேனி மக்களவை தொகுதியில் அதிமுகவினர் ஒரு ஓட்டுக்கு ரூ.20,000 வரை தர திட்டமிட்டுள்ளனர் என அமமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனால் அரசியல் தலைவர் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் விஐபி தொகுதிகளில் ஒன்றாக தேனி மக்களவை தொகுதியும் இடம் பெற்றுள்ளது. இதில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத், அமமுக சார்பில் தங்க தமிழ்செல்வன், காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் போட்டியிட உள்ளனர். 

இந்நிலையில் மதுரைக்கு நேற்று பிரசாரத்துக்கு வந்த, தேனி மக்களவை தொகுதி அமமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் மோடி பிரசாரத்தால் தேனி தொகுதியில் அதிமுக டெபாசிட் இழக்கும். நாட்டில் எத்தனையோ மாநிலங்களில் தேர்தல் நடைபெறும்போது, அதிமுக வேட்பாளரை வெற்றி பெற செய்வதற்காக ஓபிஎஸ்ஸின் தனிப்பட்ட வேண்டுதலுக்காக மோடி பிரசாரம் செய்துள்ளார். இது இந்திய அரசியல் வரலாற்றில் வெட்கக்கேடான நிகழ்வாகும் என விமர்சனம் செய்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் வீடுகளில் சோதனை செய்யும் வருமான வரித்துறை ஓபிஎஸ் வீட்டில் சோதனை மேற்கொள்ளுமா என கேள்வி எழுப்பினார். ஓபிஎஸ் தன் மகனை எப்படியாவது வெற்றி பெற வைக்க வேண்டும் என்று ரூ.1000 கோடி வரை செலவு செய்யும் திட்டத்தில் இருக்கிறார். ஆனால் தேர்தல் அணையம் அவர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் எனவும் வினவியுள்ளார்.  

தேனி மக்களவை தொகுதியில் ஓட்டுக்கு ரூ.20 ஆயிரம் வரை பணம் கொடுக்க உள்ளனர். பணத்தினை போலீஸ் வாகனங்கள் மூலமே கொண்டு செல்கின்றனர். பகிரங்கமாக சாலையில் வைத்தே பணப்பட்டுவாடாவும் செய்து வருகின்றனர் என குற்றம்சாட்டியுள்ளார்.