மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் திருவாரூர் அருகே கானூரில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் ரூ.50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காரில் ரூ.50 லட்சத்தை உரிய ஆவணமின்றி எடுத்து சென்ற சாகுல் ஹமீது என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. வரும் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19 வரை தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து கட்டங்களிலும் பதிவான வாக்குகள் மே 23-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 18-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. 

அதேநாளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. நேற்றைய தினம் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியான உடனே, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதனையடுத்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனைகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் திருவாரூர் அருகே கானூரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நாகையில் இருந்து திருச்சி நோக்கி அதிமுக கொடி பொருத்தப்பட்ட ஒரு காரில் நிறத்தி சோதனை செய்தனர். அந்த காரில் ரூபாய் 50 லட்சம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து 50 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் சாகுல் ஹமீது என்பவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.