ஜமாத் காப்பாளர் பொறுப்பில் இருந்து அதிமுக மாநிலங்களவை எம்.பி. முகமது ஜான் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால் ஜமாத் உறுப்பினர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வந்த இஸ்லாமியர்கள் நீங்கலாக பிற சமூகத்தினருக்கு இந்திய குடியுரிமை அளிக்கும் குடியுரிமை திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அண்மையில் தாக்கல் செய்தது. மக்களவையில் இந்த மசோதா எளிதாக நிறைவேறிய நிலையில், மாநிலங்களவையில் நிறைவேற வேண்டும் எனில் அதிமுக வாக்களித்தாக வேண்டிய நிலை இருந்தது. 

இந்த மசோதாவுக்கு முகமது ஜான் உட்பட அதிமுகவின் 11 எம்.பி.க்கள் வாக்களித்தனர். இதனால் எளிதாக குடியுரிமை திருத்த மசோதா நிறைவேறியது. இதனையடுத்து, டெல்லி, அசாம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கலவரம் வெடித்துள்ளது. 

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு அளித்த அதிமுகவிற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ராணிப்பேட்டை அனைத்து ஜமாத் காப்பாளர் பொறுப்பில் இருந்து அதிமுக எம்.பி. முகமது ஜான் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால் ஜமாத் உறுப்பினர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.