சுகாதார துணை அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பதிலில் தருப்தி இல்லை என்று பெருந்துரை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தோப்பு வெங்கடாச்சலம் கூறியுள்ளார்.

சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்றைய முன் தினம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மூன்றாவது நாளான இன்று கேள்வி பதில் விவாதம் நடைபெற்று வருகிறது. அதில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குட்கா விவகாரம் குறித்து விசாரனை செய்து வந்த விஜிலன்ஸ் கமிஷனர் ஜெயக்கொடி மாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவையில் பேச முற்பட்டார். ஆனால் அதற்கு சபாநாயகர் தனபால் மறுப்பு தெரிவித்து விட்டார். இதனால் திமுக வெளிநடப்பு செய்தது. 

பெருந்துரை சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம், தொகுதிக்குட்பட்ட விஜயமங்கலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஈரோடு - திங்களூரில் தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது என்றும், விஜயமங்கலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்த வேண்டியதில்லை என்றும் கூறினார்.

அமைச்சர் விஜயபாஸ்கரின் பதிலுக்கு, தோப்பு வெங்கடாசலம், அமைச்சரின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்று கூறினார். எப்போதும் புள்ளி விவரங்களை சட்டப்பேரவையில் பேசும் சுகாதார துறை அமைச்சரின் இந்த பதில் திருப்தி அளிக்கவில்லை என்று தோப்பு வெங்கடாசலம் குறிப்பிட்டார். அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக தோப்பு வெங்கடாசலம் கருத்து தெரிவித்ததை அடுத்து, அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது. 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக டிடிவி தினகரன் போர்க்கொடி தூக்கியபோது, அவரது ஆதரவாளராக தன்னைக் காட்டிக் கொண்ட தோப்பு வெங்கடாசலம், கட்சியின் அமைப்பு செயலாளர் அறிவித்திருந்தார். தோப்பு வெங்கடாசலம், தினகரன் நடத்திய கூட்டங்களிலும் பங்கேற்றுள்ளார். ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ்., அணிகள் இணைப்புக்குப் பிறகு, தோப்பு வெங்கடாசலம் அதில் அங்கமானார். ஆனாலும், தோப்பு வெங்கடாசலம் தினகரன் ஆதரவாளர் என்றே அதிமுகவினர் பேசி வருகின்றனர்.