மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடர்பாக வரும் ஜூன் 28-ல் சென்னையில் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. 

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர், நாளை மறுநாள் தொடங்கி ஜூலை 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத் தொடரில் நடைபெறும் மானியக் கோரிக்கையின்போது, துறை சார்ந்த புதிய அறிவிப்புகள், நிதி ஒதுக்கீடு, புதிய சட்ட மசோதாக்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், ஆளுநரின் ஒப்புதலுடன் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அறிவிப்புகளாக வெளியிடப்படும். இதில், மிக முக்கியமாக சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எப்படி எதிர்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

 

இந்நிலையில், மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் 28-ம் தேதி காலை 11.30 மணிக்கு எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்றும், இதில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.