அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர்கள் சி.வி.சண்முகம், சேவூர் ராமச்சந்திரன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.

அவர் வெளியிட்ட அறிக்கையில் அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருக்கும் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோரும், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் க.பொன்னுசாமியும், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் டாக்டர் ஆர்.லட்சுமணன் எம்.பி.யும் அவர்கள் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். 

அதிமுக அமைப்பு செயலாளராக ஆர்.லட்சுமணன் எம்.பியும், கொள்கை பரப்பு துணை செயலாளராக க.பொன்னுசாமியும், ஜெயலலிதா பேரவை இணை செயலாளராக ஆர்.வி.என்.கண்ணனும், துணை செயலாளராக கே.சேதுராமானுஜமும், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளராக பி.கருணாகரனும், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் சி.வி.சண்முகமும் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் மு.ராஜன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். இப்பொறுப்புக்கு சேவூர் ராமச்சந்திரன் நியமிக்கப்படுகிறார். திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளராக தூசி மு.மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆர்.லட்சுமணன் ஓபிஎஸ் ஆதரவாளர் ஆவார். இவருக்கும் சி.வி.சண்முகத்திற்கும் ஏழாம் பொறுத்த என்பார்கள். இந்நிலையில் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது அவர்களது ஆதரவாளர்களுக்கிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் ஜெயலலிதா இருந்த போது ஐவர் குழு அமைக்கப்பட்டது. அதேபோல புகார்களை விசாரிப்பது தொடர்பாக தற்போது எடப்பாடி 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார். அதில் கே.பி. முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன், அமைச்சர் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.