துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி அரசியலில் கத்துக்குட்டி, அவருக்கு அரசியல் பற்றி ஒண்ணும் தெரியாது என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். 

ராஜாஜியின் 141-வது பிறந்தநாளையொட்டி சென்னை பாரிமுனையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார். மாஃபா பாண்டியராஜன், பெஞ்சமின் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, 70 ஆண்டுகளாக திராவிட கட்சிகளால் தமிழகம் குட்டிச் சுவராகி உள்ளது. திராவிடம் அழிந்து வருகிறது, ஆன்மிகம் வளர்ந்து வருகிறது என துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தொடர்ந்து விமர்சிப்பது குறித்தும், அவருக்கு எதிர்வினையாற்ற அதிமுக தலைமை தயங்குகிறதா என்றும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், குருமூர்த்தியை எங்கள் அளவுக்கு யாராலும் விமர்சித்திருக்க முடியாது. அவர் என்ன வார்த்தை சொன்னாரோ, அதைவிட 100 வார்த்தைகளை சொல்லி அவர் மீது விமர்சனம் செய்திருக்கிறோம். அவரை கண்டு நாங்கள் அஞ்சவில்லை. குருமூர்த்தி அரசியலில் கத்துக்குட்டி. அவருக்கு ஒண்ணும் தெரியாது.

ஏதோ விளம்பரத்திற்காக, அதிமுகவை விமர்சனம் செய்தால் தான் மற்றவர்கள் தன்னை பற்றி அறிந்துகொள்வார்கள் என விமர்சனம் செய்கிறார். இவரது பேச்சை இனி பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இமயமலையும் சாதாரண பரங்கி மலையும் ஒன்றாக முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.