ஜெயலலிதா அதிமுக பொது செயலாளராக இருந்தபோது 1.50 கோடி உறுப்பினர்கள் இருந்தனர் என்றும், நாங்கள் தலைமையேற்ற 90 நாட்களில் 1.10 கோடி பேர் உறுப்பினராக சேர்ந்துள்ளதாகவும் அது விரைவில் 2 கோடியாக உயரும் என்று ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ். தெரிவித்துள்ளனர்.

 அதிமுகவில் இணைந்த புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், 1.5 கோடி உறுப்பினர்களை கொண்ட அதிமுக எஃகு கோட்டையை உருவாக்கியவர் ஜெயலலிதா. நடப்பாண்டில் 60 லட்சம் பேர் கட்சியில் இணைந்துள்ளனர் என்றார். அதிமுகவில் 1 கோடியே 10 லட்சத்து 41 ஆயிரத்து 600 உறுப்பினர்கள் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் இருந்தபோது 5 ஆண்டுகளில் 1.50 கோடி பேர் உறுப்பினர்களாக சேர்ந்தனர்.

 

  நாங்கள் தலைமையேற்ற 90 நாட்களில் 1.10 கோடி பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளதாக ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். கூறினர். மேலும், இந்த எண்ணிக்கை விரைவில் 2 கோடியாக உயரும். அதிமுக தொண்டர்கள் எங்கள் பக்கமே உள்ளனர். பொதுமக்களும் எங்களுக்கு ஆதரவாகவே உள்ளனர். டிடிவி தினகரன் தனி கட்சி தொடங்கிவிட்டார். அவருக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார். இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி பேசுகையில், சதிகாரர் திட்டங்களை முறியடித்து ஜெயலலிதா, வழியில் ஆட்சி நடக்கிறது. 

எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கத்திற்காக தன்னையே அர்ப்பணித்தவர் ஜெயலலிதா. அவர் அண்ணாதுரை, எம்ஜிஆர் லட்சியங்களை நிறைவேற்றினார். துன்பத்தையும், இடர்பாடுகளையும் தாங்கிக் கொண்டு அதிமுகவை கட்டி காப்பாற்றியவர்ஜெயலலிதா. வெளிநாடுகளிலும் அதிமுகவின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர் ஜெயலலிதா என்று இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கூறினார். துணை ஒருங்கணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறும்போது, புதிய உறுப்பினர் அட்டை இல்லாதவர்கள் கட்சி உறுப்பினர்கள் இல்லை என்ற அவர், சசிகலா அதிமுகவின் உறுப்பினராக இல்லை என்று கூறினார்.