பிரபல தனியார் டி.வி. விவாதத்தின் போது பாஜகவின் செய்தி தொடர்பாளர் நாராயணனை அதிமுகவின் ஜவஹர் அலி மிக கடுமையாக ஒருமையில் விமர்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அவர் அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து  நீக்க தலைமை பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த சில மாதங்களாகவே பாஜக- அதிமுக கூட்டணி இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. கன்னியாகுமரி எஸ்.ஐ. வில்சன் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதிமுக அரசை மிக கடுமையாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் விமர்சித்திருந்தார். தமிழகம் தீவிரவாதிகளின் புகலிடமாக உள்ளது என தொடர்ந்து கூறிவருகிறார். இதற்கு அதிமுக தரப்பில் அமைச்சர் ஜெயக்குமார் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா காலத்தில் இருந்து தொடர்ச்சியாக அரசை குற்றம் சொல்வதே பொன் ராதாகிருஷ்ணனுக்கு வேடிக்கையாகவும், வாடிக்கையாகவும் இருக்கிறது. எனவே அவரது கருத்தை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை. அவரது கருத்தை பா.ஜனதாவின் கருத்தாக நாங்கள் எடுத்துக்கொள்ளவில்லை. கட்சியில் அவருக்கு தலைவர் பதவி கிடைக்குமோ? கிடைக்காதோ? என்ற விரக்தியில் பேசி வருகிறார் என காட்டமாக கூறினார். 

அதேபோல், பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்து செல்ல அதிமுக நேரம் பார்த்து கொண்டிருக்கிறது என அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்திருந்தார். அதற்கு டுவிட்டர் பக்கத்தில் எஸ்.வி.சேகர், ஹலோ ராஜ்பவனா? என பாஸ்கரன் அமைச்சர் பதவியை பறிப்போம் என எச்சரிக்கை விடுக்கும் வகையில் பதிவிட்டிருந்தார். இதனால், இருதரப்புக்கும் இடையே முட்டல்கள் மோதல்கள் அதிகரித்து காணப்பட்டது. 

இந்நிலையில், தமிழக சட்டம் ஒழுங்கு தொடர்பாக பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்த கருத்தை முன்வைத்து பிரபல டி.வி. ஒன்றில் நேரலை விவாதம் நடைபெற்றது. இதில் அதிமுகவின் ஜவஹர் அலியும், பாஜகவின் நாராயணனும் பங்கேற்றனர். ஒரு கட்டத்தில் இவ்விவாதத்தின் போது பாஜகவின் நாராயணனை மிக கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். இந்த விவாதம் தொடர்பாக காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே இஸ்லாமியர்கள் அதிமுக மீது வெறுப்பில் உள்ளதால் ஜவஹர் அலி நீக்கினால் பிரச்சனை மேலும் பெரிதாகும் என்பதால் அவரை ஒதுக்கி வைக்க அதிமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சியைக் கலைத்து விட்டு நிர்வாகிகள் அனைவரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஏற்கனவே மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிப்போம் என முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கூறியதையடுத்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.