அதிமுக இரண்டாக உடையாது திமுகதான் இரண்டாக உடைய போகிறது என வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பினை தமிழக வருவாய் துறை ஆர்.பி. உதயகுமார் பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேசியதாவது: அதிமுக இரண்டாக உடையும் என எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்கள் கூறினார், ஆனால் திமுகவே  தற்போது இரண்டாக உடைய போகிறது. 

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்கள் முதல்வராக கனவுகண்டு வருகிறார், அவரின் முதல்வர் கனவு பலிக்காது. அதிகார சண்டை அவரது குடும்பத்தில் உள்ளது. முதலில் அவரது குடும்பச் சண்டையை சரி செய்து அவர் அதிலிருந்து மீண்டு வர அடுத்த தேர்தல் ஆகிடும். காலம் காலமாக நிலுவையியிருந்த விஷயம் தேவேந்திர குல வேளாளர் சமூக விவகாரம், அதை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய குழு அமைக்கப்பட்டு இன்னும் 30 நாட்களுக்குள் அவர்களுக்கு தீர்வு கிடைக்கும். அலங்காநல்லூர் ஜல்லிகட்டுக்கு முதல்வர் துணை முதல்வர் வர கோரிக்கை வைத்துள்ளோம். அன்று எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா நடைபெறுகிறது. அவர்களின் ஒப்புதலோடு, வழிகாட்டுதலோடு தான் ஜல்லிகட்டு போட்டி நடைபெற உள்ளது. 

கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்தியாவிலேயே முதல் முறையாக, தமிழகத்தில் தான் ஜல்லிகட்டு போட்டிகள் நடத்தவும், தமிழர்களின் பாரம்பரியத்தை காக்கவும், இளைஞர்களின் கனவை நனவாக்க ஜல்லிகட்டு நடத்துவது நமது தமிழக அரசு மட்டும்தான். 7.5 சதவீத அரசு மருத்துவ இட ஒதுக்கீடு குறித்து எதிர்கட்சி தலைவர் எங்கும் கோரிக்கை வைக்கவில்லை, திமுக பொதுக்கூட்டத்தில் கோரிக்கை வைக்க வில்லை, இப்படி இருக்கும் போது முதல்வர் அறிவிப்புக்கு பிறகு அதனை சொந்தம் கொண்டாடுவதற்கு எதிர்கட்சி தலைவர் முயற்சி செய்துவருகிறார். ஆனால் வெற்றி பெறுவது தமிழக முதல்வர் தான். தமிழகத்தில் அஇஅதிமுகதான்  கூட்டணிக்கு தலைமை தாங்குகிறது, கழக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான்.அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.