3 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கத்துக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதால் அமமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர். 

அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூன்று பேர் கட்சியின் கொள்கைகளுக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சபாநாயகரிடம் கொறடா ராஜேந்திரன் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் எம்எல்ஏக்கள் 3 பேரும் 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த விளக்கம் ஏற்றுக் கொள்ளும்படி இல்லாத பட்சத்தில் 3 பேரும் தகுதி நீக்கம் செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்றம் சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸ்க்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
 
இந்த வழக்கு ஒன்றரை நிமிடத்திற்குள் நிறைவடைந்தது. பொதுவாக ஒரு வழக்கு குறைந்தது ஒரு மணிநேரமாவது வாதி, பிரதிவாதி வாதாடுதல் நடைபெறும். ஆனால் இந்த வழக்கை பொருத்தவரை வெறும் ஒன்றரை நிமிடத்துக்குள் விசாரணை நடத்தி தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் அமமுகவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அதே வேளை அதிமுகவுக்கு இந்த உத்தரவு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. ஆட்சி அமைக்க பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அதிமுகவுக்கு இந்த 3 எம்.எல்.ஏக்களும் எதிராக வாக்களிக்கக் கூடிய நிலை உருவாகி உள்ளது. இதனால், 22 தொகுதி இடைத்தேர்தலில் 10 தொகுதிகளை வெல்ல வேண்டிய நிலை உருவாகி உள்ளது.